அம்பாறை மாவட்ட மண்ணை பூலோகத்தின் சுவர்க்கமாக மாற்றுதல் வேண்டும் – டாக்டர் டிலக் ராஜபக்ஸ .

  தர்மகுலசிங்கம் தர்மேந்திரா
 

வருகின்ற பொது தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மகத்தான வெற்றியை நிச்சயம் உறுதிப்படுத்துவார்கள் என்று  வியத்கம அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும், வருகின்ற பொது தேர்தலில் இம்மாவட்டத்தில் போட்டியிடுகின்ற மொட்டு கட்சி வேட்பாளருமான வைத்திய கலாநிதி டிலக் ராஜபக்ஸ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை கரையோர மாவட்டத்தின் முஸ்லிம் செயற்பாட்டாளர்களை கடந்த செவ்வாய் மாலை டாக்டர் ராஜபக்ஸ அவரின் அம்பாறை இல்லத்துக்கு வரவழைத்து விசேட இப்தார் கொடுத்து கௌரவித்தார். உலமா கட்சி தலைவர் அப்துல் மஜித் முபாரக் மௌலவி, அனைத்து கட்சி செயற்பாட்டாளர்கள் ஒன்றிய தலைவர் முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் உள்ளிட்ட பேராளர்கள் கலந்து கொண்ட இவ்வைபவத்தில் அவர் தொடர்ந்து பேசியவை வருமாறு
ராஜபக்ஸக்களின் நேரடியான பிரதிநிதியாக நான் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றேன். நான் பிரதிநிதித்துவ அரசியலுக்கு புதியவனாக இருக்க கூடும். ஆயினும் அம்பாறை மாவட்டத்தில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் மனித நேயம் மிக்க வைத்தியராக என்னால் முடிந்த உச்ச பட்ச சேவைகளை இப்போது வரை ஆற்றி வருகின்றேன் என்பதை பெருமையுடனும், பெருமிதத்துடனும் சொல்லி கொள்கின்றேன்.
அதே போலவே தமிழ் பேசும் மக்கள் என்னை ஆதரிக்க வேண்டும் என்பதில் பற்றுறுதியாக இருப்பதை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைபவனாகவும் உள்ளேன். அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மகத்தான வெற்றியை மாத்திரம் அல்ல எனது தனிப்பட்ட வெற்றியையும் எனது தமிழ் பேசும் உறவுகள் நிச்சயம் உறுதி செய்வார்கள். நான் தமிழ் பேசும் உறவுகளின் கணிசமான வாக்குகளை பெற்று பாராளுமன்றம் செல்வதுடன் எனது தமிழ் பேசும் உறவுகளின் குரலாகவும் அங்கு ஓங்கி ஒலிப்பேன்.
நான் தமிழ் பேசும் உறவுகளுடன் மிக நெருக்கமாக பழகுபவன். இம்மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் அக்குவேறு ஆணிவேறாக எனக்கு மிக நன்றாகவே தெரியும். ஆனால் குறுகிய சுய இலாப அரசியல்வாதிகள் இம்மக்களின் தீர்க்க கூடிய பிரச்சினைகளை தொடர்ந்தேச்சையாக தீர்க்கவே முடியாத பிரச்சினைகளாக நீடிக்க வைத்து அதில் குளிர் காய்கின்ற பாசாங்கு அரசியலையே கடந்த பல தசாப்தங்களாக முன்னெடுத்து வருகின்றனர்.
இவர்கள் கொரோனா தொற்றை காட்டிலும் சமூகத்துக்கு பேராபத்தானவர்கள். இவர்களை நிராகரிப்பதற்கான தொடக்க புள்ளியை எனக்கு வழங்குகின்ற ஒவ்வொரு வாக்குகள் மூலமாகவும் இட வேண்டும். எமது அம்பாறை மாவட்ட மண்ணை நாம் எல்லோரும் சேர்ந்து பூலோகத்தின் சுவர்க்கமாக மாற்றுதல் வேண்டும் என்று இத்தருணத்தில் கேட்டு கொள்கின்றேன் என்றார்.