ஆசிரியர்கள் சிலர் தொடர்பின்றி இருக்கின்றனர் – சி.சிறீதரன்

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழலினால் பாடசாலைகளுக்கு விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விடுமுறை காலத்தில் ஒருசில ஆசிரியர்கள் பாடசாலையின் அதிபர்களுடன் தொடர்பின்றி இருக்கின்றனர். என மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்ட தரம் 5, உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கான குறுங்கால அபிவிருத்தி திட்டம் தயாரிக்கும் செயற்பாடு நேற்று(15) வெள்ளிக்கிழமை கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற போதே இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது, வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
வலயக்கல்விப் பணிப்பாளர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில், தற்போதைய அசாதாரண சூழலிலும் சில ஆசிரியர்கள் தம்மை அர்ப்பணித்து மாணவர்களுக்காக வேலைசெய்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறான ஆசிரியர்களை பாராட்டுகின்றேன். ஆனால் ஒருசில ஆசிரியர் எவ்வித தொடர்புமின்றியே இருக்கின்றனர். அவ்வாறானவர்கள் தொடர்பில் அதிபர்கள் எமக்கு அறிவித்திருக்கின்றனர்.
தற்கால சூழலில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனி திட்டங்களை உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது.  கடந்த காலங்களில் எல்லா மாணவர்களுக்கும் பொதுவான திட்டங்களையே வகுத்தோம். அவை ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் முழுமையான பலனை கொடுப்பதில்லை. காரணம், ஒவ்வொரு பாடசாலைகளும், ஒவ்வொரு வகுப்பும், ஒவ்வொரு மாணவர்களும் வெவ்வேறான நிலையினை உடையவர்களாக இருப்பர். இதனால் ஒவ்வொருவருக்கும் ஏற்ற விதத்தில் தனித்தனி திட்டங்களை வகுப்பதே சிறந்தது.
தரம் 5க்கு செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அதற்கு பொறுப்பான ஆசிரியரை மாத்திரம் தனியாக விட்டுவிடாது, அதன்கீழ் கற்பிக்கின்ற ஏனைய  ஆசிரியர்களும் அவர்களுடன் இணைய வேண்டும். குழுவாக இணைந்து செயற்படுகின்ற போதுதான் சிறந்த பெறுபேற்றினைப் பெறலாம். கடந்த வருடங்களில் அனைவரும் இணைந்து செயற்பட்டமையினால்தான் சிறந்த பெறுபேற்றினை பெற முடிந்தது. திட்டங்களை நாம் ஆரம்பித்தாலும் அதனை கொண்டு சேர்ப்பவர்கள் அதிபர்களும், ஆசிரியர்களுமே. எனவே ஆசிரியர்களின் பங்கு அளப்பெரியது என்றார்.