வாகரையில் அபயத்தின் உபயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள மரக்கறி செய்கையாளர்களின் மரக்கறி வகைகளை கொள்வனவு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கும் பணியினை அபயம் அமைப்பினர் மேற்கொண்டுள்ளனர்.

கொவிட் 19, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தினால், வாகரைப்பிரதேச விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். முதலீடு இட்டு விவசாய செய்கையை மேற்கொண்டுள்ள போதிலும், அவற்றின் அறுவடையை விற்கமுடியாது, தமது தோட்டங்களினை கைவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்விவசாயிகளின் பாதிப்பினை குறைக்கும் பொருட்டு, விவசாயிகளின் அறுவடை பொருட்களை கொள்வனவு செய்வதற்காக, வாகரைப் பிரதேசத்தின் உதவி பிரதேச செயலாளர் திருமதி அமலினியின் வேண்டுகோளின்படி, அபயம் அமைப்பினர் ரூ50,000 பணத்தினை நன்கொடையாக அளித்துள்ளனர். அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட மரக்கறிகளை வாகரைப் பகுதியில் உள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளமை எடுத்துக்காட்டத்தக்கது.

இச்சேவையை வழங்குவதற்கு ஒத்தாசை வழங்கிய உதவிப்பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோருக்கு அபயம் அமைப்பினர் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.