மூடப்பட்ட ச.தொ.ச. நிலையம்

0
91

 

(காரைதீவு நிருபர்)காரைதீவின் சிரேஸ்ட ஊடகவியலாளர் சகா வேண்டுகோள். உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக அரசாங்கமும் அந்தந்த பிரதேச தலைவர்களும் ஒன்றுகூடி பல நடவடிக்கைகளை எடுத்து வரும்வேளையில் காரைதீவில் இப்பொதுவான செயற்பாடு இன்னும் நடைபெறாமலிருப்பது கண்டு பொதுமக்கள் பலர் தமது அதிருப்பதியையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.

எனவே காலதாமதமில்லாமல் இனியாவது பிரதேச செயலாளர் பிரதேசசபைத்தவிசாளர் சுகாதாரவைத்திய அதிகாரி படையினர் உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த தலைவர்கள் ஒன்றிணைந்து பொதுவான கூட்டமொன்றை ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கூட்டி தீர்மானங்களை மேற்கொண்டு பொதுமக்களுக்கு உரிய சேவைகளை வழங்கமுன்வரவேண்டும்.

என்று காரைதீவின் சிரேஸ்ட ஊடகவியலாளரும் கல்வியியலாளருமான வி.ரி.சகாதேவராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிப்பதாவது
கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகளாவியரீதியில் ஊழிக்கால தாண்டவத்தை ஆடிக்கொண்டிருக்கிறது. அதற்கு இலங்கை நாடும் விதிவிலக்கல்ல. அதற்குட்பட்ட காரைதீவுக்கிராமத்தில் பொதுவான திட்டமொன்று வகுக்கப்பட்டு அதன்படி செயற்படவேண்டும்.
சமகாலத்தில் மக்களுக்கு அரசின் சலுகைத்திட்டத்திலான உணவுப்பொருட்களை வழங்கும் ஒரே மார்க்கமான ச.தொ.ச. நிலையம் மூடப்பட்டுக்கிடக்கிறது. அதனால் காரைதீவு மக்களுக்கு அந்த வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளது. உதாரணமாக அண்மையில் ஜனாதிபதியினால் விலைக்குறைப்புச்செய்யப்பட்ட பருப்பு மீன்ரின் போன்ற உணவுப்பொருட்களைப்பெற இந்த மக்களால் முடியவில்லை.

இச் ச.தொ.ச.நிலையத்தை மீளவும் வேறிடத்தில் இயங்கவைத்து மக்களுக்கான சேவையைப்பெற்றுக்கொடுக்கவேண்டும்.
கல்முனை சுகாதார சேவைப்பணிப்பாளர் பணிமனையினால் அண்மையில் கொரோனா தொற்றுத்தடுப்பதற்கான இரசாயனப்பொருட்களும் தெளிகருவியும் 13சுகாதாரசேவைநிலையங்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டது. அது காரைதீவுக்கும் வழங்கப்பட்டது.

ஏனைய பிரதேசங்களில் அவை உடனடியாக இயக்கப்பட்டு பொதுஇடங்களில் விசிறப்பட்டுவருகின்றன. ஆனால் காரைதீவில் அந்நடவடிக்கை இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.
இவற்றையெல்லாம் யார் கவனிப்பது? போன்ற கேள்விகள் எழுகின்றன.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது ஊரடங்கு சட்டம் தளர்தப்பட்ட வேளையில் மக்களின் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் போது சன நெரிசலை குறைத்து நடமாடும் சந்தை ஊடாக மக்களின் காலடியில் வழங்குவது. அரசாங்கத்தினால் வழங்கப்படும் முதியோர் கொடுப்பனவுகளை கிராம உத்தியோகத்தர் ஊடாக வழங்குதல்இ சமுர்த்தி பயனாளிகளுக்கு வட்டி அற்ற கடன் சமுர்த்தியால் அத்தியாவசிய உணவு பொதிகள் வழங்குதல்இ சஹாய விலையில் சமுர்தியினால் விசேட உணவு அட்டை வழங்குதல் முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்குதல் மக்களின் சமய கடமைகள் அன்றாட நடவடிக்கைகள் தொடர்பாக மக்களுக்கு வழிகாட்டப்படவேண்டும்.

காரைதீவைச்சுற்றியுள்ள கல்முனை மாநகரசபை பிரதேசெயலகம் பிராந்திய சுகாதாரசேவைப்பணிமனை அதேபோன்றுசம்மாந்துறை மற்றும் நிந்தவூர் பிரதேசசெயலகம் பிரதேசசபை சுகாதாரப்பணிமனை போன்றவர்களெல்லாம் இணைந்து முழுக்கிராமத்திற்குத் தேவையான பொதுத்திட்டத்தை அனைவரும்இணைந்து தீர்மானித்து அதனை பொதுமக்களுக்கு அறிவித்துஅதன்படி செயற்படுகின்றனர்.
இந்த ஒருமித்த செயற்பாடு இத்தகைய பேரனர்த்த நிலைமைகளில் கட்டாயம் தேவையானது என்பதில் மாற்றுக்கருத்திற்கிடமில்லை.
பிரதேச செயலகம் தனியாகவும் பிரதேசசபை தனியாகவும் சுகாதாரப்பணிமனை தனியாகவும் எவ்வித தொடர்புமில்லாமல் இயங்கும்பட்சத்தில் பொதுமக்களுக்கான சேவை உரியவேளையில் கிடைக்க சாத்தியமில்லாமல்போகும்.
உடனடியாக கூட்டத்தைக்கூட்டி பல தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டும். அவற்றில் தீர்மானிக்கப்படக்கூடிய சில ஆலோசனைகள் இங்கு தரப்படுகின்றன.;.

01.ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள வேளையில் நோயாளர்களுக்கு வைத்திய சேவை மற்றும் பாமசி சேவையை பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்கப்படும் தனியர் மருந்துகளின் வைத்தியரின் சிட்டைகளை சமர்பிப்பதன் மூலம் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் நடமாடும் விற்பனை வண்டியில் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய சகல பொருட்களும் பொலிஸாரின் முன் அனுமதியுடன் கட்டுப்பாட்டு விலைகளில் விற்பனை செய்யப்படவேண்டும்.
02. சமூர்த்தி நல உதவிபெறும் குடும்பங்களுக்கு 10000.00 ரூபாய் பெறுமதியான வட்டி அறவிடக் கடன் சமூர்த்தி வங்கி சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்கப்படும் ஒரு வாரத்துக்கு தேவையான உலர் உணவு பொருட்கள் சமுர்த்தி நல உதவி பெறும் குடும்பங்கள் நல உதவிபெறத் தகுதியான குடும்பங்களுக்கும் சமுர்த்தி சங்கங்களுடாக வினியோகிக்கப்படவேண்டும்.
03. தபால் நிலையங்களுடாக வழங்கப்படும் முதியோர் பொது சகாய நிதி ஆகிய கொடுப்பனவுகள் கிராமசேவை உத்தியோகத்தர் அலுவலகத்தில் வழங்கப்பட வேண்டும்.
04. நாளாந்த கூலி வருமான பெறுகின்ற அல்லது குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்குகின்ற போது சமூக அமைப்புகள் பிரதேச செயலக மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முறைமைப்படுத்தும் செயலணியினை தொடர்பு கொண்டு தாமதியாது வினியோகிக்கவேண்டும்.

05. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற வேளையில் பொது மக்களுக்கு தேவையான பல சரக்கு பொருட்கள் மரக்கறி வகைகள் பிற பொருட்கள் கட்டுப்பாட்டு விலைகளில் பிரதானமற்றும் உள்வீதிகளில் பல இடங்களில் விற்பனை செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
06. மக்கள் கூடுகின்ற இடங்களில் தொற்று நீக்கிகள் விசிறும் பணியானது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் வேளைகளில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் செயற்படுத்தப்படவேண்டும்.

07. சகல ஆலயங்கள் பள்ளிவாசல்களில் மறு அறிவித்தல் வரை வழிபாடுகள் தொழுகையானது தடை செய்யப்பட்டுள்ளன.. இதனை மீறுகின்ற நிர்வாகங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
08. ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள உள்ள வேளைகளில் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை வீதிகளில் விளையாடுவதற்கோ இன்னும் பிற தேவைக்ளுக்கோ அனுப்ப வேண்டாம். இதனை மீறிகின்ற பெற்றோர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு மேலும் பல பிரேரணைகள் முன்வைக்கமுடியும்.