மட்டக்களப்பில் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் மென் பொருள் அறிமுகம்.

0
159

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்தும் வகையிலான வலையமைப்பு மென்பொருள்  ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டின் மட்டக்களப்பு மாவட்டத்தின் இலக்கு (Vision for Batticaloa 2030)என்னும் அமைப்பி ன் அனுசரணையுடன் மயூ சைபர் வலையமைப்பினால் இந்த ‘சவாரி’ என்னும் பெயரில் மென்பொருள் அப் உருவாக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் உல்லாசப்பிரயாணிகளின் வருகை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தவும் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் இந்த வலையமைப்பு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு  மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

மயூ சைபர் வலையமைப்பின் பணிப்பாளர் த.மயூரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு மாவட்டத்தின் இலக்கு (Vision for Batticaloa 2030)என்னும் அமைப்பின் பிரதம ஒருங்கிணைப்பாளரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளருமான இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் கலந்துகொண்டதுடன் இதன்போது போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்தும் வகையிலான வலையமைப்பு மென்பொருள்  தொடர்பில் அறிவுறுத்தப்பட்டது.

இன்று கொழும்பு உட்பட நகர் பகுதிகளில் போக்குவரத்து வசதிகளை வீட்டில் இருந்துபெற்றுக்கொள்வதற்கு இலகுவான பல மென்பொருள்கள் இயங்கிவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இது முதன்முறையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக இந்த செயற்றிட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மற்றும் அன்றாட சேவையில் ஈடுபடும் வான், கார்கள் சாரதிகள்  இணைத்துக்கொள்ளப்பட்டவுள்ளன.

இளைஞர்களின் ஒன்றிணைந்த வெளியீடாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சவாரி மென் பொருளினை சுமாட் போண்களில் பதிவுசெய்து தங்களுக்கான போக்குவரத்தினை செய்துகொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டது.இதற்கான முழு ஆதரவினையும் இளைஞர்கள் கோரியுள்ளனர்