களுதாவளை பாடசாலையில் இல்ல மெய் வல்லுனர் போட்டி

பட்டிருப்பு முன்னணி பாடசாலைகளில் ஒன்றான களுதாவளை பாடசாலையில் இல்ல மெய் வல்லுனர் போட்டி
பட்டிருப்பு கல்வி வலயத்தின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு களுதாவளை மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய் வல்லுனர் இறுதி நாள் போட்டி நிகழ்வுகள் நேற்று (13) மாலை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
தேசியப் பாடசாலையின் அதிபர் கே. சத்திய மோகன் தலைமையில் நடை பெற்ற இவ் விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக வாழைச் சேனை கோரலைப் பற்று பிரதேச செயலாளர் கே. தனபால சுந்தரம், மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லுரி தலைவர் கே. புண்ணிய மூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த போட்டி நிகழ்ச்சியில் மெய்வல்லுனர் போட்டி நிகழ்வுகளில் நீல நிற நாவலர் இல்லம் 535 புள்ளிகளைப் பெற்று சம்பியன் இல்லமாகவும் சிவப்பு நிற பாரதி இல்லம் 528 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்திலும் 495 புள்ளிகளைப் பெற்று பச்சை நிற விபுலாநந்தர் இல்லம் மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டன.
இதே வேளை இல்ல அலங்கரிப்பு தொடர்பாக நடை பெற்ற போட்டியில் சிவப்பு நிறப் பாரதி இல்லம் முதலாம் இடத்தையும் பச்சை நிற விபுலாநந்தர் இல்லம் நீல நிற நாவலர் இல்லங்கள் இரண்டும் சம அடிப்படையில் புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டன.