நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை தமிழர் போராட்டம் தொடரும்! – தலைநகர் திருமலையில் சம்பந்தன்

0
102

“தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை எமது இனத்தின் போராட்டம் தொடரும். எத்தனை தடைகள் வந்தாலும் அதைத் தகத்தெறிந்து போராடுவோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் தமிழர் தலைநகரான திருகோணமலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இரா.சம்பந்தன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எமது போராட்டத்தைத் தோற்கடிப்பதற்காகப் பலர் முயற்சி செய்தபோதும் அது இன்னும் பன்மடங்கு பலத்துடன் எமது மக்களின் ஆணையுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஒற்றுமை எமது மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு கிட்டும் வரை நிலைத்திருக்க வேண்டும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் மக்களின் ஜனநாயக முடிவைத்தான் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

அதனடிப்படையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் எவருக்கும் அடிபணியாது செயற்பட்டு வருவதால் இன்று சர்வதேச சமூகமும் எம்மை அங்கீகரித்து எமது மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் என இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.

எமது தீர்வு நோக்கிய பயணம் சிறப்பாகவே நகர்ந்து சென்றது. பெரும்பான்மையின மக்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்ப நிலையே இந்த ஆட்சி மாற்றத்துக்குக் காரணம். இருப்பினும் நாம் எமக்கான தீர்வு கிட்டும்வரை உறுதியாகவும் தென்பாகவும் செயற்படுவோம்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கை அரசு அமுல்படுத்தியே ஆக வேண்டும்” – என்றார்.