பாராளுமன்றக் கதிரையில் அமர்ந்து விட்டால் எல்லாம் தங்களுக்கு தெரியும் என நினைக்கின்றார்கள் – கி.துரைராசசிங்கம்

அரசியல் என்பது இன்று போய் பாராளுமன்றக் கதிரையில் அமர்ந்து விட்டால் எல்லாம் சரி தங்களுக்கு எல்லாம் தெரியும் என நினைக்கின்றார்கள் ஒரு சிலர். அப்பனான அப்பனையெல்லாம் சமாளித்த இந்தப் பெருந்தேசியவாதத்திலிருந்து பலவாறான அரசியல் நுணுக்கங்களோடு எமது அரசியலை வென்றெடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

நேற்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ்த் தேசியப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதாரத்தின் மூலம் இந்த நாட்டிலுள்ள பிரச்சினையைத் தீர்த்து வைப்பேன் என்று தற்போதைய ஜனாதிபதி சொல்லப் புறப்பட்டுள்ளார். அதற்கு ஒருபடி மேலாக மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் தமிழர்களுக்குச் சோறு கொடுத்தால் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்று சொல்லியிருக்கின்றார் என்றால் எவ்வளவு மலினமாக தமிழ் மக்களை அடையாளம் கண்டிருக்கிக்கின்றார்கள்.

இதனை எங்களை விட்டுப் பிரிந்திருக்கின்ற நண்பர்கள் விளங்கிக் கொள்வார்களாக? நாங்கள் அதனை ஏற்கவில்லை. ஆனால் எம்மை விட்டுப் பிரிந்து அவர்களுடன் இருக்கும் நீங்கள் சோற்றுக்காகத்தான் சென்றிருக்கின்றீர்களா? சோறா சுதந்திரமா என்று கேட்கின்ற போது சுதந்திரம் என்று சொல்பவன் தான் தமிழன் அவன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே நிற்கக் கூடியவனாகவே இருப்பான்.

அரசியல் என்பது வெறுமனே இன்று போய் பாராளுமன்றக் கதிரையில் அமர்ந்து விட்டால் எல்லாம் சரி தங்களுக்கு எல்லாம் தெரியும் என நினைக்கின்றார்கள் ஒரு சிலர். அப்பனான அப்பனையெல்லாம் சமாளித்தது இந்தப் பெருந்தேசியவாதம். மிகப் பெரிய எங்களுடைய தேசியத் தலைவரையே மழுங்கடித்தவர்கள் இந்தப் பெருந்தேசியவாதிகள். உலக அரசியலை, அண்டை நாட்டு அரசியலை, நமக்குள்ளே இருக்கின்ற அரசியலை எல்லாம் அறிந்த மிகச் சிறந்த அரசியல் நுணுக்கங்களோடுதான் நாங்கள் இந்தப் பெருந்தேசியவாதத்தில் இருந்து எமது அரசியலை வென்றெடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் தான் கடந்த பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக வேண்டும் என்ற தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றச் செய்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான். என்ன செய்தார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று கேட்பவர்கள் கண்ணிருந்தும் குருடர்களாக இருப்பவர்கள் தான்.

நீண்ட காலமாக இருந்த அவசரகாலச் சட்டத்தை இல்லாமல் செய்தவர்கள் யார், தற்போது எமது கூட்டத்திற்கு மக்கள் வருகை குறைவாக இருப்பது ஏன் மக்களுக்குத் தெரியும் இப்போது புலனாய்வாளர்கள் வந்துவிட்டார்கள் என்று. தைரியசாலிகள் தான் இனிப் பொதுக் கூட்டத்தற்குச் செல்ல முடியும் என்கின்ற அளவிற்கு கடந்த நவம்பர் 17ம் திகதிய நிலைமை மாற்றி விட்டது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காரர்தான் உரிமை பற்றிப் பேசுபவராக இருப்பர்.

உரிமையோடு வாழ நினைத்திட்டவர்கள் நாங்கள். எம்மை விட்டுப் பிரிந்து நின்றவர்கள். எமது நெற்குவியலில் இருந்து சிறு சிறு அளவாக நெல்லைப் பிரித்துக் குவித்து விட்டு அந்த குவித்த நெல்லுடன் வந்து எம்மைச் சேரச் சொல்கின்றார்கள். அவர்கள் பிரிந்து நின்று விட்டு ஒற்றுமை பற்றிப் பேசுகின்றார்கள். கிழக்கு மாகாணத்தைப் பொருத்தவரையில் எம்மில் இருந்து பிரிந்து சென்ற நண்பர்கள் நீங்கள் சொல்வதைத் தான் நாங்கள் சொல்லுகின்றோம். ஆனால் கணக்கைத் தான் பிழையாகச் சொல்லுகின்றீர்கள். அங்கங்கு சிதறிக் கிடக்கின்றீர்கள் கொஞ்சம் பேர் அவரவர்க்கு ஒவ்வொரு கட்சி.

தற்போது பொங்கலோடு பொங்கலாக ஒரு பொங்கற் பானை திறக்கப்பட்டிருக்கின்றது. நீதியரசர் என்ற பெருமையோடு அவரைக் கூட்டி வந்தோம். அவரது ஒவ்வொரு மேடையிலும் அவருக்காக நாங்கள் வாக்குக் கேட்டோம். அதன் காரணமாகத் தான் அவருக்கு இலட்சக் கணக்கான வாக்குகள் கிடைத்து. அவர் வெறும் நீதியரசர் என்பதற்காக அவருக்கு வாக்கு விழவில்லை. தமிழரசு தலைமையில் அவர் கண் வைத்திருந்தார் என்று தெரியும். ஆனால் சிறு பிள்ளைத் தனமாக அதனைத் தூக்கிக் கொடுக்க முடியாது. இது பாரம்பரியமான கட்சி. பாரம்பரிய முறையிலே வழிவந்தவர்களுக்கு வழங்க முடியும். அதில் கோவப்பட்டுத்தான் அவர் பிரிந்து சென்று ஒரு கட்சியை உருவாக்கி இப்போது வெறும் பொங்கல் பானையோடு வந்துள்ளார்.

வெறும் பொங்கல் பானையை வைத்து பொங்கல் பொங்க முடியாது. அரிசி, சக்கரை, பயறு போன்ற பல்வேறு பொருட்கள் வேண்டும். அவையெல்லாம் எங்கள் வீட்டினுள் தான் இருக்கின்றன. உங்களிடம் இருப்பதோ வெறும் பொங்கல் பானை பொ ங்கல் வேண்டுமாக இருந்தால் அதனை வீட்டில் இருந்தே பெற முடியும்.

நாங்கள் பெரும் வரலாற்றைக் கொண்ட இனம், உலகத்திற்கே நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்த இனம், அந்த நாகரீகத்தின் அடிப்படையில் பல சடங்கு சம்பிரதாயங்களைக் கொண்ட இனம், மதங்களுக்கு முன்பே இயற்கை வழிபாட்டைச் செய்த இனம், தமிழர்கள் மதத்தால் என்றும் வேறுபட்டிருக்கவில்லை. விரிந்த மனப்பான்மையோடு இருக்கின்றோம். தமிழகத்திற்கு என்றுமே குறைந்திடாத ஈழத் தமிழர்களாக நாங்கள் இருக்கின்றோம். எங்களுக்கு என்று ஒரு இறைமை இருக்கின்றது. நாங்கள் காலத்திற்கு ஏற்ற விதத்திலே ஒன்று சேர்ந்து வாழ்வதற்காக கூட்டாட்சி என்கின்ற சமஷ்டியிலே ஒன்று சேர்ந்து வாழ இருக்கின்றோம். அதற்கான முயற்சியை எமது தந்தை செல்வா எமக்குக் கற்பித்துத் தந்திருக்கின்றார். அந்த சமஷ்டியை இந்த நாட்டில் பெற்றுக் கொள்வதற்காக மிகவும் வைராக்கியத்தோடு வந்திருக்கின்ற இந்தப் பெருந்தேசியத்திற்கு நாங்கள் பாடம் படிப்பித்துக் கொடுப்போம். எத்தனையோ பெருந்தேசியங்கள் எத்தனையோ உருவங்களோடு வந்தன ஆனால் தமிழ்த் தேசியத்தோடு அவை தோற்றுப் போய்விட்டன.

முள்ளிவாய்க்காலிலே நாங்கள் சாம்பலாகிவிட்டோம் என்று நினைத்த போது பீனிக்ஸ் பறவையாக மீளெழுந்து வந்தோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக உருவெழுந்து வந்திருக்கின்றோம். எட்டப்பனும் காக்கை வன்னியனுக்கும் தமிழ் உணர்வு இருந்தது தான் ஆனால் அவன் வீரபாண்டிய கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட போது, பண்டார வன்னியனைக் காட்டிக் கொடுக்கும் போது அதே போன்று எமது தேசியத் தலைவரை அடையாளம் காட்டிய போது எவ்வாறு தமிழன் என்ற உணர்வு மறந்தது.

வெளியில் இருந்து கொண்டு தேசியத் தலைவரின் பெயரைச் சொன்னால் மாத்திரம் நீங்கள் தமிழர் என்று சொல்ல முடியாது. தமிழ் மக்கள் நாம் ஓரணியில் செல்ல வேண்டும். கற்பாறையாக இறுகிப் போயுள்ள பெருந்தேசியவாதத்தை எமது ஒற்றுமையின் மூலம் உடைத்தெறிந்து எங்களுக்கான ஒரு புதிய அரசியலமைப்பைக் காணும் வரை ஓயமாட்டோம் என்று தெரிவித்தார்.