மட்டக்களப்பு மாவட்டத்தில் காடால் நிலம் மூடப்பட்ட பகுதி குறைவாக உள்ளது – மா.உதயகுமார்.

0
227

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் காடால் நிலம் மூடப்பட்ட பகுதி 11.3வீதமாகவே உள்ளது. குறைந்தது 25வீதமாவது இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.
வாழ்வாதாரம், கல்வி போன்றவற்றிற்கு முனைப்பு நிறுவனத்தினால் உதவி வழங்கும் நிகழ்வு இன்று(19) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டு உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

அரசாங்க அதிபர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

அரசாங்கத்தினாலும், அமைப்புக்களினாலும் வறுமையில் இருந்து மக்களை அடுத்தகட்ட நிலைக்கு கொண்டு வருவதற்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. அவ்வுதவிகளை சரியாகப் பயன்படுத்தி பயனாளிகள் முன்னேற வேண்டும். உதவிபெற்றவர்கள், சிறிய உதவியாவது மற்றவர்களுக்கு வழங்கும் நிலையை அடையவேண்டும். கையேந்துபவர்களாக இருப்பதனை தவிர்த்து கொடுப்பவர்களாகவும் மாறவேண்டும். சேமிப்பு பழக்கம் என்பது அவசியமானதொன்று. சேமிப்பு பழக்கத்தினை ஒவ்வொருவரும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதே வாழ்க்கைத்தரத்தினை உயர்த்திக்கொள்ள முடியும்.

நாட்டில் மரங்களை நடும் திட்டம் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படுகின்றது. இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் சிறுசிறு குழுக்களும், தனியாரும் மரங்களை நடும் சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான செயற்பாட்டாளருள் பத்மநாதனும் ஒருவர். அவரின் செயற்பாட்டிற்கு முனைப்பு நிறுவனம் கௌரவிப்பு கொடுத்திருக்கின்றமை சிறப்புக்குரியது. மாவட்டத்தில் 11.3வீதமான பகுதியே காடால் நிலம் மூடப்பட்டபட்ட பகுதியாக உள்ளது. குறைந்தது 25வீதமாவது இருக்க வேண்டும். அவ்வகையில் மாவட்டத்தில் மரங்களை அதிகம் நடவேண்டிய தேவை இருக்கின்றது. இதேவேளை மரங்களை நடுபவர்களை பாராட்ட வேண்டிய கடப்பாடும் உள்ளது. எல்லோரும் ஒன்றிணைந்து, குறைந்தது எமது பிறந்தநாளிலாவது மரத்தினை நடவேண்டும். சிலர், மரங்கள் இருப்பதை சுமையாக நினைக்கின்றனர். அவற்றினை வெட்டுகின்றனர். மரங்கள் அழிக்கப்படுவதனால் பிரதிகூலங்களையே எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்றார்.

இதன்போது பாடசாலை தூர இடங்களுக்கு சென்று தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தெரிவு செய்யப்பட்ட நான்கு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும், குறைந்த வருமானம் பெறும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் பெண் தலைமைதாங்கும் எட்டு (8) குடும்பங்களுக்கு தமது வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு சுயதொழில் உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டது
முனைப்பின் தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற, இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், முனைப்பு சுவிஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மாணிக்கம் குமாரசாமி, உறுப்பினர் சந்திரகுமார், முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன், பொருளாளர் அ.தயானந்தரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.