நாட்டின் துரித அபிவிருத்திக்கு மூளைசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஜனாதிபதி

நாட்டின் துரித அபிவிருத்திக்காக மூளைசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது கட்டாயமாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

உயர் தரம்வாய்ந்த கல்வியை வழங்குவதாக அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும் தனியார் கல்வி நிறுவனங்களும் உறுதியளிக்குமாக இருந்தால் இலங்கையில் கல்விக்காக வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க முடியும் என்பதுடன், உயர் கல்வித் துறையை நாட்டுக்காக அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மார்க்கமாக மாற்ற முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (10) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2019 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

ஆயிரத்து இருநூற்று என்பத்து இரண்டு பட்டதாரிகளுக்கான பட்டங்கள் இதன்போது வழங்கப்பட்டன. ஒரு கலாநிதி பட்டம் உட்பட 224 பட்டப் பின்படிப்பு மற்றும் முதுமானி பட்டங்களுடன் 1057 பேர் தமது முதலாவது பட்டத்தினை பெற்றுக்கொண்டனர்.

2019 ஆம் ஆண்டு விசேட திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு ஜனாதிபதி அவர்களினால் அன்பளிப்புகளும் வழங்கிவைக்கபட்டன.

ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகமானது 1981 ஆம் வருடம் 61ஆம் இலக்க பாராளுமன்ற சட்டத்தின் மூலம் அறிவுத்துறையில் சிறந்து விளங்கும் முப்படையினரை உருவாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு அப்போது பாதுகாப்புச் செயலாளராகவிருந்த கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இது முழுமையானதொரு பல்கலைக்கழகமாக மாற்றியமைக்கப்பட்டது. மருத்துவ பீடத்தை ஆரம்பித்தல், சாதாரண மற்றும் வெளிநாட்டு கெடற் மாணவர்களை அனுமதித்தல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பட்டப் பின்படிப்பு கல்வி வாய்ப்புகளை அறிமுகப்படுத்தல், தெற்கு சூரியவௌ பல்கலைக்கழகத்தை அமைத்தல் மற்றும் நவீன வைத்தியசாலையொன்றை ஆரம்பித்தல் ஆகியன இக்காலப்பிரிவிலேயே மேற்கொள்ளப்பட்டது.

சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைகக்கழகம் உள்நாட்டில் மட்டுமன்றி பிராந்தியத்திற்கே முன்னுதாரணமான உயர் கல்வி நிலையமாக மாற வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இலவசக் கல்வி இலங்கையில் சிறந்த மாற்றங்களை உருவாக்கியுள்ளது. அதனை நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும். தனியார் துறையில் கற்பதற்கு பண வசதியுள்ளவர்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்லாது உயர் கல்வியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

நாட்டின் கல்வி முறைமையின் உண்மையான சாத்தியவளங்களை விரிவுபடுத்துவதற்கு நாம் செய்ய வேண்டிய விடயங்கள் ஏராளமுள்ளன. தற்போதைய கல்வி முறை பரீட்சையை மையமாகக்கொண்டதாகும். அது மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்புகள் குறுகிச் செல்ல காரணமாக அமைந்துள்ளது. அறிவு, திறன் மற்றும் ஆற்றல்களை கருத்திற்கொள்ளாது பரீட்சையை மையமாகக்கொண்டு எதிர்காலம் தீர்மானிக்கப்படுகின்றது. அதனால் பெற்றோரினதும் சமூகத்தினதும் அமைதியின்மைக்கு வழிவகுத்துள்ளது. பிள்ளைகளின் வாழ்க்கையில் மிகவும் தீர்க்கமான காலப்பகுதியில் தனிப்பட்ட வளர்ச்சிக்கான பல சந்தர்ப்பங்கள் நழுவிச் சென்றுவிடுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

21ஆம் நூற்றாண்டு அறிவின் நூற்றாண்டாகும். செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழிநுட்பம், இணையம், உயிர் தொழிநுட்பம், தன்னியக்கம் போன்ற தொழிநுட்பத் துறைகள் இனிவரும் சில தசாப்தங்களில் அபிவிருத்தியடைந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் அம்சங்களாக விளங்கும். இத்தொழிநுட்பங்களுக்கு ஏலவே செல்வதனூடாக பல வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இரண்டாம் நிலை கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு அரச வளங்களின் பற்றாக்குறை தடையாக இருக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். நாட்டில் உயர் தரம்வாய்ந்த மூன்றாம் நிலைக் கல்வி வாய்ப்புகளை வழங்குவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமானால் நாட்டிலிருந்து மூளைசாலிகளின் வெளியேற்றத்தை தடுக்க முடியும் என்பதுடன் அந்நியச் செலாவணி குறிப்பிடத்தக்களவு நாட்டை விட்டும் வெளிச்செல்வதையும் குறைப்பதற்கும் உதவும்.

தொழிற் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிநுட்பக் கல்லூரிகளின் தரத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப முன்னேற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் விளக்கினார்.

‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு முன்பள்ளிக் கல்வி முதல் மூன்றாம் நிலைக் கல்வி வரை கல்வித் துறையில் தேவையான மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு திட்டமிட்டவகையில் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் அதற்கு ஒத்துழைக்குமாறு இத்துறையில் உள்ள அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் பந்துல குணவர்த்தன உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி, முப்படைகளின் தளபதிகள் மற்றும் கொத்தலாவல பல்கலைகழகத்தின் வேந்தர் தயா சந்தகிரி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.