முறாவோடை வித்தியாலயத்தின் மதிலை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய மனோகணேசன் பொலிஸாருக்கு பணிப்புரை

0
289

வாழைச்சேனை முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் மைதானச் சுற்றுமதிலை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மனோ கணேசன் பொலிஸாருக்கு வலியுறுத்தியுள்ளதாக அமைச்சரின் கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் கே.கோபிநாத் தெரிவித்தார்.

வாழைச்சேனை முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் மைதான சுற்றுமதில் மீது காட்டுமிராண்டித்தன தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்ட போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் மைதான சுற்றுமதில் சேதமாக்கப்பட்டதுடன், மேலதிக வகுப்புகள் நடத்தப்பட்டு கொண்டிருந்த வேளை கற்கள் எறியப்பட்டதாக பாடசாலை அதிபர் மற்றும் ஊர் மக்கள் எனக்கு தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பாடசாலை அதிபர் அமைச்சர் மனோ கணேசனிடம் தொலைபேசியின் தெரிவித்ததை அடுத்து அமைச்சரினால் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அடாவடித்தனத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்று விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

இப்பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறுபட்ட அரச தரப்பினர்களுக்கு என்னால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் அமைச்சர் கூடிய கவனம் செலுத்தி உள்ளார் என்றார்.

இதன்போது வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நல்லரெட்ணம், பாடசாலை அதிபர், பொதுமக்கள் கலந்து கொண்ட குறித்த சம்பவம் தொடர்பில் அமைச்சரின் கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்ட இணைப்பாளரிடம் தெளிவுபடுத்தினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள முறாவோடைத் சக்தி வித்தியாலய மைதானச் சுற்றுமதில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு விசமிகள் சிலரால் உடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.