மட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு

புதைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் கருப்பையா ஜீவராணி நேற்று (16.08.2019) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். அதனையடுத்து வைத்தியசாலை பணிப்புறக்கனிப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

மட்டு போதனா வைத்தியசாலையின் கழிவுகளை புதைப்பதற்காக பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட காணியான செங்கலடி வேப்பைவெட்டுவான் பகுதியில் ஒதுக்கப்பட்டு அங்கு நேற்று முன்தினம் புதன்கிழமை (14.08.2019) வைத்தியசாலை நிர்வாகம் 6 வாகனங்களில் கழிவுகளை எடுத்துச் சென்று புதைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது அங்கு பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அது தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று வியாழக்கிழமை அரசாங்க வைத்தியர்கள் சங்கம், தாதியர்கள், ஊழியர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்து  வைத்தியசாலை கழிவுகளை அகற்ற மக்களுக்காக நீதிவேண்டி பணிப்புறக்கனிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் நேற்றைய முன்தினம் வியாழக்கிழமை,நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆகிய இருநாட்கள் வழக்கு இடம்பெற்றது. இதன்போது குறித்த இடத்திற்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் கருப்பையை ஜீவராணி நேரில் சென்று பார்வையிட்டு அங்கு மக்களுக்கு வைத்தியர்கள் இந்த கழிவு முகாமைத்துவம் பற்றி விளக்கினர்.

இதன் அடிப்படையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் நியமனங்களின் அடிப்படையில் இடம்பெறும் இந்த கழிவு புதைப்பதற்கு அனுமதி வழங்கியதுடன், கழிவு புதைக்கும் பகுதிக்கு அருகில் உள்ள குளத்தின் நீரை பரிசோதிக்குமாறும். மத்திய சுற்றாடல் அதிகாரி இதனை மேற்பர்வை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த நீதிமன்ற உத்தரவுக்கமைய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவந்த அரசாங்க வைத்தியா்கள் சங்கம், தாதியர்கள், ஊழியர்கள் சங்கங்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டனர்.

அத்துடன் இந்த போராட்டம் மட்டக்களப்பு மக்களின் நீதிக்கான போராட்டம் எனவே இதன்போது வைத்தியசாலைக்கு கிளினிக் மற்றும் நோய்களுக்கு சிகிச்சை பெறவந்த நோயாளர்களிடம் எமது போராட்டம் தொடர்பாக தெரிவித்தபோது அவர்கள் அதனை உணர்ந்து எமக்கு அதரவு தெரிவித்தவர்களுக்கு முதற்கண் நன்றிகள் தெரிவிப்பதாக அரசாங்க வைத்தியாகள் சங்கம் தெரிவித்தனர் .