கொக்கட்டிச்சோலை மயானத்தில் பொலிஸாரின் சடலத்தினை தேடும் பணி!

0
480

கொக்கட்டிச்சோலை காவல் பிரிவிற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பொது மயானத்தில், காணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலத்தினை தேடும் பணி இன்று(18) வியாழக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 2008ம் ஆண்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தினைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல்போயிருந்தார்.

குறித்த காணாமல்போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் மூவரை கடந்த மார்ச் மாதம் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், கடந்த ஜீன் மாதம் 11ம் திகதி முனைக்காடு மயானத்தில் சடலத்தினை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சடலமெதுவும் கண்டெடுக்கப்படாத நிலையில், இன்றைய தினம் முனைக்காடு கிராமத்திற்கு அருகில் உள்ள கொக்கட்டிச்சோலை மயானத்தில் சடலத்தினை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில், தேடுதல் பணி முன்னெடுக்கப்பட்டது, இதன்போது குழிகள் தோண்டப்பட்ட போதும் எவ்விதமான மனித எச்சங்களும் கண்டெடுக்கப்படாத நிலையில் மாலை 7மணியளவில் தேடுதல் பணி நிறைவுறுத்தப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள இரண்டு சந்தேகநபர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.