இந்துக்களுக்கேயுரித்தான பாதயாத்திரை மகத்துவம் வாய்ந்தது!

யாழ்.பாதயாத்திரீகர்கள் மத்தியில் பிரதேசசெயலாளர் ஜெகராஜன் உரை.
(காரைதீவு  நிருபர் சகா)

இந்துக்களுக்குரித்தான பாதயாத்திரை பாரம்பரியமானது மகத்துவம் மிக்கது. சக்திவாய்ந்தது.அதன் மதிப்பையுணர்ந்தவர்களாக பாதயாத்திரையிலீடுபடுபவர்கள் நடக்கவேண்டும்.

இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து 36தினங்கள் நடந்து காரைதீவை வந்தடைந்த பாதயாத்திரீகர்கள் மத்தியில் உரையாற்றிய காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தெரிவித்தார்.

யாத்திரீகர்களுக்கு இந்துகலாசார திணைக்களம் வழங்கிய நிதியுதவியில் கொள்வனவு செய்யப்பட்ட உலருணவுப்பொதி வழங்கும் நிகழ்வு காரைதீவு ஸ்ரீ நந்தவனசித்தி விநாயகர் ஆலயமுன்றலில் பாதயாத்திரை சங்கத்தலைவர் வேல்சாமி மகேஸ்வரன் தலைமையில் நேற்று(16) நடைபெற்றது.


லண்டனில் வாழும் யாழ்.முருகபக்தர் க.மாணிக்கவாசகர் வழங்கிய 10ஆயிரம் ருபா அன்பளிப்பை பாதயாத்திரிகர்கள் 50பேருக்கும் தலா 200 ருபா வீதம் பிரித்து பாதயாத்திரைச்சங்கப் போசகர் வி.ரி.சகாதேவராஜா வழங்கிவைத்தார்.

அந்த நிகழ்வில் பிரதேசசெயலர் ஜெகராஜன் மேலும் பேசுகையில்;:
பக்தி முதிர்ச்சியுடன் சம்பந்தப்பட்டது. அதாவது வயது ஆக ஆக அந்த பக்குவம் முதிர்ச்சி தானாகவரும். எனினும் சிலருக்கு இளமையிலும் அந்த முதிர்ச்சிவருவதுண்டு.
பலநூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து தமிழர்களின் பாராம்பரிய பாதயாத்திரை பக்திமுக்தியாக காலாகாலமாக நடைபெற்றுவருகிறது. எனவே அதன் புனிதத்தன்மை கெடாதவகையில் அதிலீடுபடுபவர்கள் நடந்துகொள்வதவசியம்.

ஏனெனில் ஏனைய சமுகங்கள் அவற்றைப்பார்த்துக்கொண்டிருக்கின்றன. அவர்கள் இதனை பெரிதாக கருதுகிறார்கள். காட்டுப்பாதை திறப்பு என்றால் அரசஅதிபர் மற்றும் உயர் சிங்களஅதிகாரிகள் தமிழர்களாகிய எம்மிடம்தான் பேசுவார்கள். அவர்கள் அதனை உயர்ந்த ஸ்தானத்தில்வைத்துக்கணிப்பதே காரணம்.


எனவே நாம் முருகப்பெருமானை நினைந்து செல்கையில் அதன் புனிதத்தன்மை பேணப்படும். எமது நடை உடை பாவனை நடத்தை அனைத்தும் கண்ணியமாக இருத்தலவசியம்.என்றார்.

பாதயாத்திரைச்சங்க செயலாளர் இ.பாக்கியநாதன் நன்றியுரையாற்றினார். பொருளாளர் எஸ்.தேவதாசன் மூத்த பாதயாத்திரீகர் எஸ்.தம்பிராசா ஆகியோரும் கலந்துசிறப்பித்தனர்.