ஹிஸ்புல்லாஹ்! நீங்கள் மௌனம் காப்பதே மகா புண்ணியம்!

 

ஹிஸ்புல்லாஹ் உங்களது அரசியலில் எங்களுக்கு விமர்சனங்கள் இருக்கின்றன. இருந்தபோதும், உங்களுக்கெதிராக இனவாதிகள் கிளர்ந்தெழுந்த போது அந்த இனவாதிகளுக்கெதிரான நிலைப்பாட்டையே சமூகம் எடுத்தது.

அதன் அா்த்தம் நீங்கள் அதி உத்தம நேர்மையான அரசியல்வாதி என்றோ மனிதர்களில் புனிதமானவா் என்றோ, குற்றம் ஏதுமற்றவா் என்றோ இந்த முஸ்லிம் சமூகம் கருதியதால் அல்ல.

உங்கள் அரசியல் நடவடிக்கைகளில் சமூகத்திற்கு நன்மையையும் சிலபோது தீமைகளும் கிடைத்திருக்கின்றன. அவற்றை விபரிக்க இது தகுந்த நேரமுமல்ல.

காத்தான்குடி போன்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்களில் இருந்து கொண்டு உங்களால் வீராப்பு பேச முடியும்.

உங்களின் வீராப்பு பேச்சுக்கு உங்கள் ஊரில் உங்கள் அடிமட்ட ஆதரவாளர்கள் துள்ளிக்குதித்து “விசில்” அடித்து உங்களை ஊருக்குள்ளே வீரனாக்கவும் முடியும். பேசும்போது அல்லது கருத்து வெளியிடும் போது இந்நாட்டில் வாழும் ஏனைய முஸ்லிம்கள் தொடர்பாகவும் கொஞ்சம் கரிசனை எடுங்கள்.

உங்களின் அண்மைய பேச்சு சாத்தியமானதா? இல்லையா? என்பதை ஒருபுறம் வைப்போம். அந்த பேச்சுக்கு இனவாத பௌத்த பிக்குகள் எதிர்வினையாற்ற ஆரம்பித்து இருக்கின்றார்கள்.

உங்களின் அந்த பேச்சுகள் நாட்டில் நாலா பக்கங்களிலும் சிதறி வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு எத்தகைய மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதை உங்களால் உணர முடியாதுள்ளது.

இன்று இனவாதிகளின் பல குற்றச்சாட்டுகள் உங்கள் காத்தான்குடியையும், கிழக்கு மாகாணத்தையும் மையமாக வைத்தே கிளப்பப்படுகின்றன. ஐஎஸ்ஐஎஸ் என்ற கொலைகார கும்பல் கருத்தரித்ததே நீங்கள் ஆதிக்கம் செலுத்தும் உங்கள் காத்தான்குடி மண்ணிலேதான்.

அரசியல் அதிகார வர்க்கம் இந்த கொலைகார கும்பலை கடந்த காலங்களில் பாதுகாத்து வந்ததாக உங்கள் ஊரிலிருந்தே செய்தி கசிந்து வருகிறது. “இதற்கெல்லாம் நான் பொறுப்பல்ல” என்று தூசு பட்ட கைகளை தட்டிவிட்டு போவது போல் உங்களுக்கப் போக முடியாது.

“கழுவுற மீனில் நழுவுற மீனாக” உங்களுக்கு நழுவி போகவும் முடியாது. இது இலங்கை முஸ்லிம்களின் வாழ்வுரிமையோடு, தலைவிதியோடு தொடர்பான பிரச்சினையாக மாறிவிட்டது.

ஒரு சிறு குழுவினரால் போஷிக்கப்பட்ட தீவிரவாதத்தின் விபரீதத்தை இன்று முழு முஸ்லிம் சமூகமும் அணுவணுவாக அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

சிங்கள இனவாதிகளை விடுங்கள், சாதாரண சிங்கள மக்கள், முஸ்லிம்கள் மீது அச்சம் கொள்வதற்கு நீங்கள் அச்சாணியாகி இருக்கின்றீர்கள்.

உங்கள் ஊரை “அரபு” மயமாக்கல் முதல் தனியார் பல்கலைக்கழகம் என்று நீங்கள் சொல்லிக்கொள்கின்ற அந்த “அரபு நிதிமூலம்”
ஏற்படுத்தி இருக்கின்ற அதிர்வுகள் வரை எல்லாம் உங்களையே சுற்றி இருக்கிறது.

தெற்கில் கொளுந்து விட்டெரியும் இனவாதத்திற்கு உங்களது செயற்பாடுகளும் சாதகமாக அமைந்திருக்கின்றன. எரியும் அந்த சிங்கள பௌத்த இனவாதத்தின் வெப்பத்தில் நாட்டின் அனைத்து பிரதேசங்களில் வாழ்கின்ற அப்பாவி முஸ்லிம்களின் உள்ளங்களும் ஊமைகளாக கருகிக்கொண்டிருக்கின்றன.

முஸ்லிம்கள் நாளுக்கு நாள் அச்சத்திலும், பீதியிலும், அவநம்பிக்கையிலும் புதைந்துக் கொண்டிருக்கின்றார்கள்.

உங்கள் வீராப்பு பேச்சுகளுக்கு கொஞ்சம் விடை கொடுங்கள். விபரீதத்தை உணருங்கள். தவறுகளை உணருங்கள்.

குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும், ஒளிந்து மறைந்து கொள்வதற்கும் உகந்த கூடாரமாக இந்த முஸ்லிம் சமூகத்தை நீங்கள் பயன்படுத்தாதீர்கள்.

நீங்கள் கடந்த காலங்களில் செய்த காரியங்களும், சமகாலத்தில் செய்யும் காரியங்களுமே முழு முஸ்லிம் உம்மத்தும் இன்று குறி வைக்கப்படுவதற்கு காரணமாகியிருக்கிறது என்பதை கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்.

இனிமேலாவது வெற்றுக் கோஷத்தை தவிருங்கள். அல்லாஹ்வுக்காக அடக்கி வாசியுங்கள்.

Azeez Nizardeen

முகப்புத்தகத்திலிருந்து.