சிங்கள தமிழ் மக்கள் ஒன்றிணையுமாறு வந்த வேண்டுகோளை மிக எச்சரிக்கையோடு பார்க்க வேண்டும்

தற்போது சிங்கள மக்களோடு தமிழ் மக்களும் ஒன்றிணைந்து செயற்படுங்கள் என்ற ஒரு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது மிக எச்சரிக்கையோடு பார்க்க வேண்டிய ஒன்று சிங்கள மக்களோடு சேர்ந்து முஸ்லிம் மக்களின் உரிமையை நசுக்குவதற்கு நாங்கள் ஒருபோதும் துணையாக இருக்கப் போவதில்லை என  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கே. துரைராசசிங்கம் தெரிவித்தார்.

சமகால நாட்டு நடப்புக்கள் தொடர்பாகக் வியாழக்கிழமை (06) கருத்து வெளியிட்ட அவர், மேலும் கூறியதாவது,

சிறுபான்மை இனம் என்கின்ற அடையாளத்தைத் தக்க வைக்கின்ற நிலைமையிலே அந்தந்த காலத்திற்கு எற்ற விதத்தில் அனைத்து சிறுபான்மை இனங்களும் ஒரே செயற்பாட்டில் தங்களுடைய நிகழ்சி நிரலை அமைத்துக் கொள்வதும் பெருந்தேசிய வாதத்திற்கு எதிராக எங்களைப் பலப்படுத்திக் கொள்வதும் தற்போது எங்களுக்குத் தேவையான ஒரு அம்சமாகும்.
அரசியல் என்பது ஒரு சதுரங்கம். நிகழ்வுகளுக்கு ஏற்ற விதத்திலே அந்தந்த அரசியற் கட்சிகளின் தலைவர்கள் அல்லது அதில் முன்னிலை வகிப்பவர்கள் தங்கள் காய்நகர்த்தல்களை மேற்கொள்வார்கள்.
அந்த வகையிலேதான் தற்போது நடைபெற்றிருக்கின்ற முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகலும் அமைந்துள்ளதாகக் கருதுகின்றேன்.
ஒவ்வொருவரும் தங்கள் வழிகளில் காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார்கள். யாரும் எதிர்பார்க்காத விதத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து தங்கள் பதவிகளைத் துறந்திருக்கின்றார்கள்.
அரசியல் காய்நகர்த்தல்களில் அவர்கள் கையாண்ட வழியாகத்தான் இதனை நாங்கள் அவதானிக்கின்றோம்.
தமிழர்களாகிய நாங்கள் இந்த நாட்டில் அனைத்து மக்களோடும் சேர்ந்து எங்களுடைய சம அந்தஸ்தைப் பேணிக்கொண்டு வாழ விரும்புபவர்கள்.
இந்த நாட்டில் சிங்கள பௌத்த தேசியவாதத்தினுடைய இன்னுமொரு முகம் தற்போது அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றது. இது இந்த நாட்டின் அரசியலுக்கு உகந்ததல்ல.
அதுரலியரதன தேரர் தான் நாடாளுமன்றத்தில் முன்வைத்த பிரேரணைக்கு வலுச் சேர்க்கும் முகமாக உண்ணாவிரம் மேற்கொண்டு அதனை பௌத்த துறவிகளின் மன்றுக்கு கொண்டு சென்றிருக்கின்றார்.
இதனை அவர் நாடாளுமன்றத்திலேயே கையாண்டிருக்க முடியும்.
இது போன்றே ஞானசார தேரரை ஜனாதிபதி விடுதலை செய்யும் போது அவர் அரசியல் விடயங்களில் ஈடுபடமாட்டார் என்று தெரிவித்திருந்தார் ஆனால் தற்போது அக்கதைகள் எல்லாம் பொய்த்துப் போய் விட்டன.
உண்மையில் கண்டியில் நடைபெற்ற பௌத்த பிக்குகளைத் தலைமையாகக் கொண்ட அந்த மக்கள் பேரணி என்பது இந்த நாட்டினுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலிலே மிகப் பொருத்தமற்ற ஒரு செயற்பாட்டைக் கொண்டு வரும் என்பதற்கான ஒரு எச்சரிக்கையாக இருக்கின்றது.
அரசியல் தீர்வுகளிலே பௌத்த துறவிகள் சம்மந்தப்படும் போதெல்லாம் அரசியல் நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டு அது சிங்கள பௌத்த தேசியவாதத்தினுடைய வெற்றியாகத்தான் தொடர்ச்சியாக நிகழ்ந்து வந்திருக்கின்றது என்பதும் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சிறுபான்மையினர் என்பதும் வரலாறு தந்த பாடம்.
சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து வந்த எல்லா விடயங்களிலும் இது நிகழ்ந்திருக்கின்றது.
முழுமையாகச் சொல்லப்போனால் சிங்கள பௌத்த தேசியவாதத்தினுடைய இன்னுமொரு முகம் தற்போது அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இது இந்த நாட்டு நலனுக்குப் பொருத்தமானதாக இருக்காது. மாறாகக் குந்தகம் விளைவிக்கக் கூடியதாகவே இருக்கும்.
தற்போது நடைபெறுகின்ற விடயங்கள் சிறுபான்மை சமூகத்தினுடைய அபிலாசைகள் எல்லாம் முற்றுமுழுதாக முடக்கப்படுகின்ற செயற்பாட்டுக்கு அடித்தளமாகவே அமையப் போகின்றன.
தமிழ் மக்கள் நல்லாட்சியை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தோம். புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதுதான் எமது செயற்திட்டத்தில் மிக முக்கியமாக இருந்தது.
இரண்டு கட்சிகளையும் இணைத்துக் கொண்டு இந்த நாட்டின் இயல்புக்கு எற்ற விதத்தல் எமது செயற்பாடுகள் மெதுவாகச் என்றாலும் உறுதியாக நடைபெற்று வந்தது.
அரசியலமைப்பு தொடர்பில் பல்வேறு நிபுணர்களின் அறிக்கைகள் வெளிப்படுத்தப்பட்டு இறுதி அறிக்கையும் தயாராக இருந்தது. இந்த நிலையிலேதான் கடந்த ஏப்ரில் 21ம் திகதி பாரிய அனர்த்தம் நடைபெற்று குழப்ப நிலையைத் தோற்றுவித்துள்ளது.
அதன் விளைவாக தற்போது அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கின்றது. நாங்கள் இந்த அவசரகாலச் சட்டம் தொடர்பில் அப்போதைய அவசரகால நிலைமைக்கு ஏற்ற விதத்தில் அதற்கு ஆதரவு வழங்கினோம்.
ஆனால், இரண்டாவது முறை அதனை எதிர்த்தோம். இதற்குக் காரணம் அவசரகால நிலைமை இல்லை என்பது அல்ல ஆனால் இந்த அவசரகாலச் சட்டம் குறிப்பாக தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்படும் என்ற அனுபவம் சார்ந்த அடிப்படையிலேதான் அதனை எதிர்த்தோம்.
சிறுபான்மை மக்களுடைய குறிப்பாக தமிழ் மக்களுடைய செயற்பாடு அபாயக் குறியை எதிர்நோக்கக் கூடியதாகத்தான் இருக்கின்றது. என அவர் தெரிவித்தார்.