முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதிகளாக காட்ட முற்படுகிறார்கள் ; வியாழேந்திரன்

வடக்கு-கிழக்கு இணைக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என எச்சரித்தவர்களும்  தமிழ் மக்களின் காணிகளை பெற்று பள்ளிவாசல்களைக் கட்டினோம் என்று மார் தட்டியவர்களும் எம்மை முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதிகளாக காட்ட முற்படுகிறார்கள் என மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. வியாழேந்திரன் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற இலங்கை மதிப்பீட்டாளர்கள் நிருவாக திருத்த சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐ.எஸ் .ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு உதவியவர்களை நாம் வெளிக்கொணரும்போது எம்மை முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதிகளாக காட்டுவதற்கு  பலர் முயற்சி செய்கின்றனர். முஸ்லிம் மக்கள் குற்றவாளிகள் இல்லை. எனினும் பயங்கரவாதத்தோடு சம்பந்தப்பட்டவர்களை வெளி உலகுக்கு காட்ட வேண்டியது எமது கடமை.

அத்துடன் மீண்டும் வடக்கு-கிழக்கு இணைக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என்பவர்களும் தமிழ் மக்களின் காணிகளை பெற்று பள்ளிவாசல்களைக் கட்டினோம் என்று கூறுபவர்களும் எம்மை முஸ்லிம் மக்கள் மத்தியில் இன வாதியாக காட்ட முற்படுகிறார்கள். இத்தகைய செயற்பாடுகளை செய்தவர்கள் தம்மை நல்லவர்களாக காட்டிக்கொண்டு எம்மை இனவாதிகளாக்கப் பார்க்கின்றனர் என்றார்.