மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு 156ஆசிரியர்கள் தேவை

0
209

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 156ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக, வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய, கல்வி நிலைமை தொடர்பான சூழ்நிலைப் பகுப்பாய்வும் கல்வி அபிவிருத்தியினை திட்டமிடல் தொடர்பான கலந்துரையாடலும் இன்று(05) புதன்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற போதே இதனைக் குறிப்பிட்டார்.

வலயக்கல்விப் பணிப்பாளர் மேலும் கூறுகையில்,

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையின் காரணமாக பாடசாலைகளை வழிநடத்திச்செல்வதில் சிரமங்கள் உள்ளன. குறிப்பாக ஆரம்பப்பிரிவுக்கு 76ஆசிரியர்களும், இடைநிலைப்பிரிவிற்கு 80ஆசிரியர்களுமாக 156ஆசிரியர்களுக்கான தேவை வலயத்தில் நிலவுகின்றது. இதனை தற்காலிகமாகவது நிவர்த்தி செய்வதற்கு பிரதேசத்தில் உள்ள பொது அமைப்புக்கள் உதவிசெய்ய வேண்டும். தரம் 5மாணவர்களின் கல்வி அபிவிருத்தியினைக் கருத்தில் கொண்டு, விசேட வகுப்புக்களையும், வதிவிட செயலமர்வுகளையும், சிறந்த வளவாளர்களைக் கொண்டு கருத்தரங்குகளையும், மாதிரிவினாத்தாள் பரீட்சைகளை நடாத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம். அவற்றில் சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். ஆளணிப்பற்றாக்குறை நிலவுகின்ற அதேவேளை, உட்கட்டமைப்பு, சுகாதாரம், குடிநீர் போன்ற வசதிகளையும் பாடசாலைகளில் ஏற்படுத்த வேண்டி உள்ளது என்றார்.

மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.ஹரிகரராஜ், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மண்முனை தென் மேற்கு கோட்டத்தைச் சேர்ந்த பாடசாலை அதிபர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.