ஆறு மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவளிக்கும் முறை

 

“ஐயா எனது குழந்தைக்கு பாரம் போதாது ஏதாவது விட்டமின் எழுதி தாங்கள், என்ன விலை என்றாலும் பரவாயில்லை”
இது என்னிடம் தாய்மார்களால் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி!!

சமகால தரவுகளின் படி இலங்கையில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் போஷாக்கானது கணிசமான அளவு மேம்பட்டுள்ளது. இதற்கு பல காரணங்களைச் சொல்லலாம் இருந்தாலும் பொதுவாக தாய்மார்களுக்கு இருக்கும் போசாக்குணவு சம்பந்தமான சந்தேகங்களை இக்கட்டுரை மூலம் தீர்க்கலாம் என்று நினைக்கிறேன்.

ஒரு குழந்தைக்கு கர்ப்ப காலம் முதல் பிறந்து முதல் இரண்டு வயது வரை உள்ள காலம் போஷாக்கை பொறுத்தவரையில் மிக முக்கியமான காலமாகும். இக்காலப்பகுதியில் சிறந்த போசாக்கு கிடைக்குமிடத்து அக்குழந்தை சுகதேகியான மனிதராக உருவாகும். இங்கு சுகதேகி எனப்படுவது ஆரோக்கியம் மட்டுமல்லாமல் புத்திக்கூர்மையையும் குறிக்கும்.

பிறப்பிலிருந்து முதல் 6 மாத காலத்திற்கு தாய்ப்பாலை மட்டுமே ஆகாரமாக உண்ட குழந்தைக்கு ஆறு மாத முடிவில் திண்ம ( உப) உணவுகளை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
காரணம்

1. ஆறு மாத காலத்தின் பின் குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானதில்லை என்பதனால்

2. ஒரு வயது முடிவில் குழந்தைகளுக்கு குடும்ப உணவுகளை உண்ண படிப்படியாக பழக்க வேண்டும் என்பதால்

3. வளரும் குழந்தைக்கு சிறந்த உணவு பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதால்
குழந்தைகளுக்கு கண்டிப்பாக ஆறு மாத முடிவில் திண்ம உணவுகளை ஆரம்பித்தல் வேண்டும். இங்கு சிலவேளைகளில் வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் நான்கு மாத முடிவில் அதனை ஆரம்பிக்கலாம். ஆனால் கண்டிப்பாக நான்கு மாதம் முடியும் முன் வேறு உணவுகளை ஆரம்பிக்கக் கூடாது.

திண்ம ஆகாரத்துடன் சேர்த்து ஒரு வயது வரும் வரை தாய்ப்பால் கொடுத்தல் வேண்டும். இங்கு தாய்ப்பாலானது உணவு கொடுத்த பின்னரே குழந்தை பசியோடு இருக்கும்போது கொடுக்கப்பட வேண்டும். உணவு கொடுக்க முதல் தாய்ப்பால் கொடுப்பதனால் உணவை உட்கொள்ளும் அளவு குறைவடையும்.

வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தாய்ப்பாலை வெளியில் எடுத்து வைத்து அதை குழந்தைக்கு கொடுக்க சொல்லலாம். தாய்ப்பாலானது அறை வெப்ப நிலையில் 8 மணித்தியாலமும் குளிர்சாதனப் பெட்டியில் 24 மணித்தியாலமும் பழுதடையாமல் இருக்கும்.

ஆறு மாதங்கள் பூர்த்தியானவுடன்

திண்ம உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கும்போது நன்கு மசித்த சோற்றுடன் (பிளெண்டரில் அடித்தது அல்ல) சிறிதளவு தாய்ப்பாலை சேர்த்துக் கொடுப்பது நல்லது. தாய்ப்பாலின் சுவைக்கு பழக்கப்பட்ட குழந்தைக்கு இது இலகுவாக இருக்கும். உணவை கொடுத்தபின் தேவையானபோது தாய்ப்பால் ஊட்டவும்.

ஆரம்பத்தில் மசித்த உணவில் 2 தொடக்கம் 3 தேக்கரண்டி அளவு தொடங்கி பின்னர் படிப்படியாக அளவினை கூட்டவும்.

3 தொடக்கம் 5 நாட்களின் பின் சோறுடன் பருப்பு வகைகளை சேர்த்து கொடுக்கலாம். பின்னர் படிப்படியாக மரக்கறி (கரட், பூசணி, வாழைக்காய், உருளைக்கிழங்கு, பருப்பு, மரவள்ளி கிழங்கு) இலைக்கறி வகைகளை ஆரம்பிக்கவும். அதன் பின்னர் சிறு துண்டுகளாக்கப்பட்ட இறைச்சி, மீன், கருவாடு, ஈரல் போன்ற உணவுகளை ஆரம்பிக்கலாம்.

உணவை ஆரம்பித்து இரண்டு வாரங்களின் பின் அதனுடன் எண்ணைய் சேர்க்கலாம் (தேங்காய் எண்ணெய், மாஜரின், நெய் போன்றவை). இது உணவின் சுவையையும் போஷாக்கையும் கூட்டும் எனவே குழந்தை உணவை விரும்பி உண்ணும்.
ஒரு நாளைக்கு குழந்தைக்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் பிரதான உணவுகளை கொடுக்க வேண்டும்.

பிரதான உணவுக்கு இடையில் தாய்ப்பால் ஊட்டலாம். ஒரு புதிய உணவை ஆரம்பித்து மூன்று நாட்களின் பின்னரே அடுத்த புதிய உணவை ஆரம்பிக்க வேண்டும்.

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு இரும்புச்சத்து முக்கியமானது என்பதால் இரும்புச் சத்து அடங்கிய உணவுகளை அதிகமாக கொடுக்க வேண்டும் (மீன், இறைச்சி, கருவாடு, ஈரல்).

குழந்தையின் 7 மாத முடிவில்

சிறு துண்டாக்கப்பட்ட உணவைக் கொடுத்தல். சோற்றுடன் சோயா பீன்ஸ், பீன்ஸ் போன்ற விதை உணவுகள், தூளாக்கப்பட்ட நெத்தலி மீன், கோழி இறைச்சி, மரக்கறி வகைகளை படிப்படியாக அளவில் கூட்டவும். இப்பொழுது பிரதான உணவு ஒரு தேனீர் கோப்பையின் அரைவாசியை (1/2) விட கூடுதலாக இருத்தல் வேண்டும்.

உணவு உண்ணல் ஆனது கற்பிக்கப்பட வேண்டிய பழக்கம் என்பதால் குழந்தைக்கு எழுந்தமான நேரங்களில் உணவு ஊட்டுவதை தவிர்க்கவும். குழந்தை உணவு உண்பதற்கு தனியான இடத்தை ஒதுக்குங்கள். குடும்ப அங்கத்தவர்கள் உணவு உண்ணும் போதும் பார்க்க விடுங்கள்.

இந்த வயதில் குழந்தை சுற்றுச்சூழல் பற்றி அறிய மிக ஆவலாக இருப்பதால் குழந்தைக்கு உணவு ஊட்டும் போது சுற்றுச்சூழல் பற்றி சொல்லிக் கொடுங்கள் (உதாரணமாக சிறுவயதில் எமக்கு நிலாவைக் காட்டி சோறு ஊட்டுவது போல).

அதுபோல உணவு வழங்கும் போது குழந்தையுடன் அன்பாக கதைப்பதுடன், பல்வேறு வகையான உணவுகளை உண்ணக் கொடுத்து அவற்றின் சுவையை பற்றி சொல்லிக் கொடுங்கள்.
குறிப்பாக தாய்மாருக்கு இப்பொழுது அதிக பொறுமை தேவைப்படும்!!!

8 தொடக்கம் 9 மாதம் வரை

இப்பொழுது குழந்தைக்கு பல் வளர ஆரம்பிப்பதால் சிறிய துண்டாக்கப்பட்ட உணவுகளை குழந்தைக்கு அறிமுகப்படுத்த வேண்டும். முக்கியமாக, நன்கு கடையப்பட்ட உணவுகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 – 4 தடவை பிரதான உணவுகளை கொடுக்கலாம். பிரதான உணவுக்கு இடையில் 1 தொடக்கம் 2 தடவை இடைப்பட்ட உணவை வழங்கலாம் (யோக்கட், திரிபோசா, அவித்த பயறு, கௌப்பி, அவித்த கிழங்கு, பழங்கள் போன்றவை).

உணவு பழக்கவழக்கம் ஆனது குழந்தையின் விருத்தி உடன் சார்ந்து இருப்பதால் இப்பொழுது குழந்தை கைவிரல்களால் பிடிக்கக் கூடிய சிறிய அளவுகளை கொடுக்கலாம் (கரட் துண்டு, பயற்றங்காய், பாண் போன்றவற்றை). படிப்படியாக ஒருவேளை உண்ணும் உணவின் அளவை அதிகரிக்கவும்.

9 தொடக்கம் 12 மாதம் வரை

இப்பொழுது குழந்தைக்கு முக்காவாசி (3/4) தேநீர் கோப்பை அளவு 3 – 4 தடவை பிரதான உணவுடன் இரண்டு இடை உணவுகளையும் கொடுக்கவும்.

12 மாத முடிவில்

குழந்தை தானாகவே உண்ண சந்தர்ப்பத்தை வழங்குதல்.
குடும்ப அங்கத்தவர் உடன் சேர்ந்து உண்ண பழகுதல். ஒரு வயதில் போஷாக்கான குடும்ப உணவை உண்ண கொடுத்தல் வேண்டும் (3 – 4 பிரதான உணவுடன் 2 இடை உணவுகள்). பிரதான உணவின் அளவானது ஒரு தேனீர் கோப்பையை விட அதிகமாக இருத்தல் வேண்டும். குழந்தைக்கு பசி எடுக்கும் வரை பொறுத்திருந்து உணவு வழங்கவும்.

இங்கு முக்கியமாக தாய்மார்கள் கவனிக்க வேண்டியது, குழந்தைக்கு அடிக்கடி பிஸ்கட், மென்பானங்கள், இனிப்புகள் வழங்குவதால் குழந்தைக்கு அதிகமாக பசி எடுப்பதில்லை. இப்பொழுது நீங்கள் குழந்தைக்கு கட்டாயப்படுத்தி பிரதான உணவு கொடுக்கும் போதும் அந்த முயற்சியானது தோல்வியடையும். எனவே குழந்தையும், தாயும், ஏனைய குடும்ப அங்கத்தவர்களும் இதனால் விரக்தி அடைவர். இதுவே இன்று அனேகமான தாய்மாருக்கு உள்ள சவால்!

எனவே குழந்தைக்கு இடைப்பட்ட நேரத்தில் பிஸ்கட், மென்பானம், இனிப்புகள் வழங்குவதை தவிர்க்கவும். உங்கள் உறவினர்கள் கொண்டுவரும் அவ்வாறான உணவுகளை குழந்தைக்கு கொடுக்க வேண்டாம். இயலுமானவரை இதை உறவினர்களுக்கும் அறியப் படுத்தவும்.
இனிப்பு பண்டங்களை இயலுமானவரை குறைக்கவும். இனிப்பு உண்ட பின் வாயை நன்கு கழுவிவிடவும்.

குழந்தைக்கு எப்போது முட்டை கொடுப்பது?
முட்டை மஞ்சள் கருவானது 7 மாதத்திலிருந்தும், வெள்ளைக்கருவானது 9 மாதத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். முட்டையானது நிறை உணவு என்பதால் இதை ஒவ்வொரு நாளும் உணவில் சேர்த்துக் கொள்வது சாலச் சிறந்தது.

குழந்தைக்கு பசுப்பால் எப்போது கொடுப்பது?
குழந்தைக்கு இரண்டு வயது முடியும்வரை பசுப்பாலை நேரடியாக கொடுப்பதை தவிர்க்கவும். ஆனாலும் தயிர், யோக்கட் போன்றவற்றை கொடுக்கலாம்.

குழந்தைக்கு சீனி மற்றும் உப்பு எப்போது கொடுப்பது?
ஒரு வயது வரை சீனி, உப்பு கொடுப்பதை முழுவதுமாக தவிர்த்தல் வேண்டும் ஏனென்றால் பிள்ளைகள் இதற்கு பிற்காலத்தில் பழக்கப்பட்டு விடக்கூடிய ஆபத்து உள்ளது.

தாய்ப்பாலை எவ்வளவு காலத்துக்கு கொடுத்தல் வேண்டும்?
ஒரு வயதில் இருந்து தாய்ப்பாலை கொடுக்கும் அளவை குறைத்து, இரண்டு வயதுக்குள் தாய்ப்பாலை முற்றாக நிறுத்தல் வேண்டும்.

எனவே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுத்து அவர்களை சுகதேகியான ஒருவராக சமூகத்தில் உருவாக்குவோம்!!!

Dr. விஷ்ணு சிவபாதம்
MBBS, DCH, MD Paediatrics
குழந்தை நல வைத்திய நிபுணர்
மருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனம் – கொழும்பு