வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு மேலதிகமாக 7 பில்லியன்

0
262

வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு மேலதிகமாக 7 பில்லியன் ரூபாவை ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பனை நிதியம் என்ற பெயரில் ஏற்கனவே 50 பில்லியன் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் நேற்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் இதனைத் தெரிவித்ததுடன், இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியினைத் துரிதப்படுத்தும் முகமாக, இரண்டு வருட காலப்பகுதியில் 5000 மில்லியன் முதலீட்டில் துரித அபிவிருத்திக்காக ‘பனை நிதியம்” அமைக்கும் திட்டம் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

அதற்கு மேலதிகமாகவே மேலும் 7 பில்லியனை ஒதுக்குவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

பனை நிதியம் என்றால் என்ன?

பனை நிதியம் என்று சொல்லுகின்ற போது அது பனைக்கான நிதியம் அல்ல. அது உண்மையில் வட, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கான நிதியம். இதன் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படலாம். ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு தேவையான முன்னுரிமைப்படுத்தப்பட்ட கருத்திட்டங்கள் இனம் காணப்பட்டு, அந்த கருத்திட்டங்களைத் தயாரிக்கின்ற வேலைத்திட்டங்களின் செயற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

என வட மாகாண அபிவிருத்தி செயலாளர் வி. சிவஞானஜோதி குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்காக ஏற்கனவே 50 பில்லியன் ஒதுக்கப்பட்டமை தொடர்பில் மாகாணங்களில் உள்ள சில மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

பனை நிதியம் திட்டத்தில் தமது மாவட்டத்திற்கு இதுவரை எந்த நிதியும் கிடைக்கவில்லையெனவும், எவ்வளவு நிதி தமது மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் அறிவிக்கப்படவில்லையெனவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.