பலத்தபாதுகாப்புக்கு மத்தியில் பாடசாலைகள் இன்று ஆரம்பம்.

0
311

கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட ஆரம்ப பிரிவு பாடசாலைகள் அனைத்தும்; பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை முன் நுழைவாயிலில் வைத்து இராணுவம், பொலிஸார் மற்றும் பாடசாலை பாதுகாப்பு குழு உறுப்பினர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாடசாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து நாடளாவிய ரீதியில் திங்கள்கிழமை குண்டுதாக்குதல்கள் நடத்தப்படுமென உறுதிப்படுத்தப்படாத எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த நிலையில் முப்படைகளின் தீவிர சோதனை நடவடிக்கைகளின் பின்னர் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கி­ழமை முதல் ஆரம்பமாகியுள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் புத்தகப் பைகள், பிரயாணப் பைகள் போன்றன சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் தேசிய அடையாள அட்டை என்பனவும் சரி பார்க்கப்பட்டதுடன், மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதிகளில் ஆங்காங்கே இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தினார்கள்.

ஆசிரியர்கள் மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகள் வழமைக்கு மாறாக பிரிதொறு இடத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்குடா வலயத்தில் காலை 7.30 மணி வரையிலும் 12 சத வீதமான மாணவர்கள் சமூகமளித்துள்ளதாகவும், வலயத்தில் மாணவர்களின் வருகையில் பெரும் வீழ்ச்சியாகவுள்ளதாகவும், சில பாடசாலைகளில் ஆசிரியர்களின் வருகையை விடவும் மாணவர்களின் வருகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சில பாடசாலைகள் 2 அல்லது 4 எண்ணிக்கையான மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளதாகவும், இந்நிலமையினை சீர்செய்வதற்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு உள ரீதியான விளக்கமளிக்கும் விசேட செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி தெவித்தார்.

கல்குடா கல்வி வலயத்தில் 76 ஆரம்ப தரப் பாடசாலைகள் காணப்பட்ட நிலையில் அனைத்து பாடசாலைகளிலும் காலை வேளையில் 12 சத வீதத்துக்கு மேற்பட்ட மாணவர்களின் வருகையை அவதானித்தாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி மேலும் தெவித்தார்.

இதன்போது பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயம், வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் மற்றும் எல்லைப் பாடசாலையான வாழைச்சேனை இந்துக் கல்லூரி என்பன முழுமையான சோதனை நடவடிக்கை இடம்பெற்றதுடன், குறித்த இடங்களுக்கு கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன, கல்குடா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.ஜ.நாகரத்ன ஆகியோர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.

இதேவேளை தரம் 6 – 13ம் தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளை கடந்த 6ம் திகதியன்று அன்று ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.