நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு வருந்துகின்றேன்.

(க.கிஷாந்தன்)

ஆசிய நாட்டில் அணைவரும் ஈர்க்க கூடிய வகையில் இலங்கையின் மலையக பிரதேசங்களை உல்லாச பயணிகள் விரும்பதக்க பிரதேசமாகவும், உல்லாச பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையிலும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த அதேவேளை, கண்டியில் 10 ஆண்டு அபிவிருத்தி திட்டமாக ஜப்பான் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டம் நுவரெலியா மாவட்டத்திலும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு  நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா நல்லத்தண்ணி பிரதேசத்திற்க்கு 11.05.2019 அன்று சென்றுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே. பியதாஸவின் அழைப்பின் பேரில் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் நல்லதண்ணி சமன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டதன் பின் நல்லத்தண்ணி விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவ பிரதேசத்தை உல்லாச பயணிகள் விரும்பதக்க பிரதேசமாக கடந்த டிசம்பர் மாதம் இணங்காணப்பட்டுள்ளது. அங்கு உல்லாச பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் கோல்ப் விளையாட்டு மைதானம் ஒன்றும் அமைக்க ஏற்பாடாகியுள்ளது.

அதேபோன்று பொகவந்தலாவ, நுவரெலியா, நானுஓயா மற்றும் கித்துல்கலை போன்ற பிரதேசங்களை உல்லாச பயணத்துறை பிரதேசமாக மாற்றி அமைப்பதுடன் மஸ்கெலியா, நல்லதண்ணி, நோட்டன்பிரிட்ஜ் ஆகிய பிரதேசங்களையும் உல்லாச பிரயாணத்துறை பிரதேசமாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு தெரிவித்த பிரதமர் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் வருந்துவதாகவும், கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி ஈஸ்டர் தினத்தன்று ஏற்பட்ட அசம்பாவிதங்கள் நாட்டினுடைய உல்லாச பிரயாணத்துறைக்கும் பொருளாதாரத்திற்கும் பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளதாக வருத்தம் தெரிவித்தார்.

நாட்டினுடைய அபிவிருத்தியில் உல்லாச பிரயாணத்துறை பாரிய பங்களிப்பை வழங்குவதால் நாட்டின் மலையக பிரதேசங்களின் உல்லாச பகுதிகள் விரும்பதக்க கூடிய வகையில் அபிவிருத்திகளை முன்னெடுப்பது எமது இலக்காகும்.

அந்தவகையில், பொகவந்தலாவ பிரதேசம் உல்லாச பிரயாணிகளுடைய வருகையை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு அங்கு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேபோன்று மஸ்கெலியா, நல்லதண்ணி பிரதேசம் ஆசிய நாட்டின் அணைவரும் விரும்ப கூடிய சிவனொளிபாதமலை வழிபாட்டு ஸ்தலம் அமைந்துள்ளதால் இங்கு சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீகள் மற்றும் கிறிஸ்தவர்கள் அணைவரும் வருகை தருவதோடு, வெளிநாட்டவர்களும் அதிகளவில் வருகை தருகின்றனர்.

ஆகவே இப்பிரதேசத்தில் காணப்படும் குளிர் சிகரமான காலநிலையை கருத்திற் கொண்டு இயற்கை வளங்களை பாதுகாத்து இப்பகுதியின் சூழலில் அதிக அக்கறை கொண்டு அபிவிருத்தி செய்வது தொடர்பில் அரச திணைக்களங்கள் மற்றும் பெருந்தோட்ட நிர்வாகங்கள் ஆகியவற்றுடன் கலந்துரையாடப்பட்டு இப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸவின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளேன்.

அதேபோன்று அட்டன் நகரம் தற்போது அபிவிருத்தி அடைந்து வருகின்றது போல் நானுஓயா நகரம், நுவரெலியா நகரம், கித்துல்கல பிரதேசம் ஆகியவையும் மேலும் அபிவிருத்தி அடைய வேண்டும் என்பது நோக்கமாக உள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் சிவனொளிபாதமலை வழிபாட்டு நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதால் பிரதேசத்தில் உல்லாச பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாக இப்பிரதேசத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்து சுற்றுச் சூழல் பாதுகாப்பினையும் உறுதி செய்து அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.