நாட்டின் தற்போதைய நிலைக்குக் காரணம் தென்னிலங்கை அரசியல்வாதிகள் தான்..

நாட்டின் தற்போதைய நிலைக்குக் காரணம் தென்னிலங்கை அரசியல்வாதிகள் தான்…

(ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர்)

ஒரு இனத்தின் கலாச்சார பண்புகளை அடக்கியாளும் உரிமை இந்த நாட்டில் யாருக்கும் இல்லை. நாட்டின் தற்போதைய நிலைக்குக் காரணம் இந்த தென்னிலங்கை அரசியல்வாதிகள் தான் என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை புரிந்து கொள்ளாமல் இனங்களுக்கிடையில் பிரிவினையை உருவாக்கும் கருத்துக்களை விதைக்கக் கூடாது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கா அவர்கள் பாராளுமன்றில் ஆற்றிய உரையில்  உள்ள மதவாத கருத்துக்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை நாடு ஒரு குடியரசு நாடு. இந்தநாட்டில் மூவின மக்கள் வாழ்கின்றனர். இதில் தமிழர்கள் வடக்கு கிழக்கு இணைந்த தாயகப்பகுதியின் பூர்வீக குடிமக்கள் இதற்கான வரலாற்று சான்றுகளும் உள்ளன.

சிங்கள பௌத்த கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டும் இங்கு வாழலாம் என்ற பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயகா அவர்களின் கருத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது நாம் எமது இனத்திற்கான கலாச்சார விழுமியங்களைப் பாதுகாக்கவே அரசியலில் ஈடுபடுகின்றோம்.

மதவாதம் எம்மிடம் இல்லை மொழி, இனம், கலாச்சாரத்தை பாதுக்க வேண்டிய பொறுப்பு எம்மிடம் உள்ளது. எனவே ஒரு இனத்தின் கலாச்சார பண்புகளை அடக்கியாளும் உரிமை இந்த நாட்டில் யாருக்கும் இல்லை. இதை புரிந்து கொண்டு அனைவரும் தேசிய ஒற்றுமையுடன் செயற்பட முன் வரவேண்டும்.

தமிழ், சிங்களம், முஸ்லீம் மூன்று இனங்களும் வாழ்கின்ற இந்த நாட்டில் தனி சிங்கள பௌத்த கலாச்சாரத்தை திணிக்கும் இனவாதப் போக்கு பிரிவினையை ஏற்படுத்தும் இனவாதிகளின் அறியாமையை வெளிப்படுத்தி நிற்கின்றது. இத்த விடயம் மனவேதனையை உருவாக்கியுள்ளது என்பதனையே நாம் கூறுகிறோம்.

கடந்தகால வரலாறுகளை நினைவிற்கொண்டு எதிர்காலத்தை திட்டமிட்டு செயற்பட முன் வரவேண்டும். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையினை முறியடிக்க இது முடிவல்ல. இந்த நிலைக்கு காரணம் இந்த தென்னிலங்கை அரசியல்வாதிகள் தான் என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை புரிந்து கொள்ளாமல் இனங்களுக்கிடையில் பிரிவினையை உருவாக்கும் கருத்துக்களை விதைக்கக் கூடாது.

இலங்கை நாட்டின் தேசிய ஒற்றுமையை பாதுகாப்பு போன்று சிதைக்க முயலுவதும் இனவாதம் தான். இலங்கை நாடு இலங்கையர்களுக்கே சொந்தமானது இதை சிந்தித்து நாம் அனைவரும் செயல்ப்பட வேண்டும். ஒரு அமைதியான சூழலில் ஒற்றுமயை வேண்டி நாம் நிற்கின்றோம். இதுவே எமது நிலைபாடுமாகும்.