6ம் திகதி பாடசாலைகள் ஆரம்பம் : உரிய முறையில் பாடத்திட்டங்களை பூர்த்தி செய்ய பணிப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில்  இரண்டாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் தாமதமாகி தொடங்கும் நிலையில், உரிய முறையில் பாடத்திட்டங்களை பூர்த்தி செய்ய கல்வி அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக,  கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பிரதமரின் இல்லமான அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேவைப்படும் பட்சத்தில் எதிர்வரும் ஒகஸ்ட் மாத விடுமுறையைக் குறைத்து அல்லது, சனிக்கிழமைகளில் பாடசாலைகளை நடத்தி  பாடத்திட்டங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளின்; கீழ், அனைத்துப் பாடசாலைகளினதும் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என, கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது பாடசாலைகளுக்கு அவசியமான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், பாதுகாப்புப் பிரிவின் பரிந்துரைக்கமைய பாடசாலைகளை நடத்துமாறு அதிபர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

கத்தோலிக்கப் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பாதுகாப்புப் பிரிவு, பாடசாலை அபிவிருத்திக் குழு, பெற்றோர்கள் ஆகியோரை இணைத்து பாதுகாப்பு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

பாடசாலைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக்கான பாதுகாப்பை உறுதி செய்ய போக்குவரத்து சங்கத்துடன் கலந்துரையாடியதாகவும்,  அமைச்சர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளின் முதலாம் தவணை முடிவடைந்து, இரண்டாம் தவணைக்காக கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து, இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் தொடங்கும் தினம் பிற்போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 29ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவிருந்த போதும், மீண்டும் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய, அனைத்து பாடசாலைகளிலும் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 6ஆம் திகதி தொடங்கவுள்ளன.