கிழக்கு ஆளுனரை பதவியிலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை வேண்டும் – இரா.துரைரெட்ணம்

கிழக்கு மாகாண ஆளுனர் தொடர்பில் எழும் சந்தேகம் தொடர்பில், நீதியான விசாரணை நடாத்தி குற்றவாளி இல்லையென நிருபிக்கும் வரையில் தற்காலிகமாக ஆளுனரை பதவியிலிருந்து இடைநிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,

குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களையும்,

ஆதரவளித்தவர்களையும் கைது செய்து, விசாரணை நடத்தி நீதி மன்றத்தினால் உச்சபட்ச தண்டணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த குறிப்பிட்ட மாதங்களுக்கு முதல் இச்சம்பவத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டமை, இந்திய அரசினால் உளவுத்தகவல் பரிமாறப்பட்டமை, அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தும் பாதுகாப்புச் சபைக்கு தெரிவிக்கப்படாமை போன்ற விடயங்களில் அரசின் கவனக்குறைவே. இதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். இவைமட்டுமின்றி கிழக்குமாகாண ஆளுனர் தற்கொலையாளிக்கு பாராட்டு வழங்குவதும் இணையத்தளங்களில் செய்திகளாக வெளியாகி உள்ளன. நீதியான விசாரணை ஊடாக தண்டணை வழங்க வேண்டும். பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ்மாஅதிபர் கடமைகளை நிறுத்தப் போவதாக அறிவித்த மாண்புமிகு ஜனாதிபதி கிழக்கு மாகாண ஆளுனர் தொடர்பாகவும், கிழக்குமாகாண தமிழ்மக்கள் இணையத்தளங்களில் ஆளுனரும் தற்கொலையாளியும் உள்ள படத்தைப் பார்த்து கொதிப்படைந்த நிலையில், இச்சம்பவங்களுடன் ஆளுனர் சம்மந்தப்பட்டுள்ளாரா? என சந்தேகிக்கும் நிலையில் நீதியான விசாரணை நடாத்தி குற்றவாளி இல்லையென நிருபிக்கும் வரையில் தற்காலிகமாக ஆளுனரை பதவியிலிருந்து இடைநிறுத்த ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனைவடக்கு பிரதேசசெயலக பிரிவின் எல்லைக்குட்பட்ட மாவட்டத்தின் தலைநகர் என்று கருதுகின்ற மட்டக்களப்பு நகரத்தில் 21.04.2019 அன்று தேசிய முஸ்லிம் தவ்ஹித் ஜமாத் (ஐ.ளு)அமைப்பினரால் தமிழ் சமூகத்திற்கு எதிராக மனிதநேயமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் மத்திய வீதியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் காலை 8.52 மணியளவில் நடைபெற்றது. இதில் 27பேர் படுகொலை செய்யப் பட்டும்,75பேருக்கு மேற்பட்டவர்கள் படுகாயமும் அடைந்தனர். இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களையும், ஆதரவளித்தவர்களையும் கைது செய்து, விசாரணை நடத்தி நீதி மன்றத்தினால் உச்சபட்ச தண்டணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும.

கிட்டத்தட்ட இந்நாட்டில் 359பேர் படுகொலை செய்யப்படுவதற்கும்,450ற்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததற்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும். இவைமட்டுமின்றி கிழக்குமாகாண ஆளுனர்அவர்கள் தற்கொலையாளிக்கு பாராட்டு வழங்குவதும் இணையத்தளங்களில் செய்திகளாக வெளியாகி உள்ளன.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து விரைவாகவும், நேர்த்தியாகவும் மட்டக்களப்பு மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகளும், தீ அணைக்கும் படையினர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், அரசாங்கஅதிபர், இளைஞர்கள் உட்பட முப்படையினரும் மிகவும் சிறப்பான சேவைகளை செய்ததென்பது பாராட்டுக்குரியது. மாநகரசபையின் ஊழியர்கள் பல வேலைக்கான தற்காப்பு உடைகள் இல்லாமலேயே சிறப்பான சேவை செய்ததென்பது பாராட்டப்பட்டது. இவைமட்டுமின்றி வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியநிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள்,சுகாதாரசேவை உதவியாளர்கள், சிற்றூளியர்கள், உட்பட விசேடமாக (து.ஆ.ழ),சட்டவைத்தியநிபுணர்கள் சட்ட வைத்திய அதிகாரிகள், பிரேத அறையில் கடமையாற்றிய சுகாதார சேவை உதவியாளர்கள் போன்றேர்கள் குறிப்பிட்ட தினங்களாக இரவுபகல் பாராது தங்களுடைய சேவைமனப்பாங்கை வெளிக்காட்டியது வரவேற்கத் தக்கதும் பாராட்டுக்குரியதுமாகும். இத்தோடு வைத்தியசேவை நிருவாகத்தால் அவசரதேவைக்காக காயமடைந்தவர்களுக்கு இரத்த தானம் வழங்க கோரிய போது ஆயிர்கணக்கான இளைஞர்கள் ,யுவதிகள், முதியோர்கள் முந்தியடித்துக் கொண்டு வரிசையில் நின்றதென்பது தமிழ் மக்களின் மனிதாபிமான உணர்வை வெளிக்காட்டி நின்றதை உணர்த்துகின்றது.
எனவே குண்டுவெடிப்புத் தொடர்பாக அரசாங்கம் பொறுப்பேற்பதோடு, கிழக்கு மாகாண ஆளுனர் அவர்கள் தற்கொலையாளிக்கு உடந்தையாக இருந்தாரா, இல்லையா என்று மக்கள் சந்தேகிப்பதால் நீதியான விசாரணை நடாத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை இச்சம்பவத்தை அறிந்திருந்தும் யுத்தத்தின் கொடுமையை உணர்ந்த தமிழ்மக்கள் பொறுப்புணர்வுடன் அமைதி காத்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.