அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஓட்டமாவடி யில் அவசரக் கூட்டம்

0
253

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலத்தில் அவசரக் கூட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

அத்தோடு இந்நாட்டில் தொடர் குண்டு வெடிப்பில் உயிர் நீத்த ஆத்மாக்களுக்காக மௌன அஞ்சலியும் அனுஸ்டிக்கப்பட்டது.

விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் நடைபெற்ற விசேட கூடத்தில் சமூக நல வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாகிர் மௌலானா, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சன பெரமுன மற்றும் பாதுகாப்பு படை அதிகாரி மேஜர் அமர, கடற்படைத்தளபதி, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.முஸம்மில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத், ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.சிஹாப்தீன், பிரதேச சபை உறுப்பினர்கள், பள்ளிவாயலின் தர்மஹர்த்தாக்கள், பொது நல அமைப்புகள், கல்குடா ஜம்மியத்துல் உலமா சபை, கல்வி மான்கள் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

இதில் இந்நாட்டில் ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் உயிர் நீத்த ஆத்மாக்களுக்காக இராஜங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்ததுடன், இந்நாட்டின் சட்டம், ஓழுங்கை நிலை நாட்ட பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டிக் கொண்டதுடன், பள்ளிவாயல்கள், பொது இடங்களில் பாதுகாப்புகளை பலப்படுத்துமாறும் கூறினார்.

இந்நாட்டில் முப்பது வருடகால யுத்தம் முடிவடைந்து, பத்து வருடங்களின் பின்னர் இவ்வாறான ஒரு துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மக்கள் அமைதியை பேணுமாறும் சந்தேகத்திற்கிடமான விடயங்களை உடனுக்குடன் அறிவிக்குமாறு பாதுகாப்புப்படை அதிகாரி மேஜர் எஸ்.அமர கேட்டுக் கொண்டார்.