மாகாணங்களுக்குள் மத்திய அரசின் ஆளுகைகளை நிலை நாட்டுவதற்கு முயற்சி : மீளாய்வு செய்யவேண்டுமென்கிறார் இரா.துரைரெட்ணம்.

0
516

மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் ஊடாக அமைக்கப்பட்ட நிருவாகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து இக் கட்டமைப்பு ஊடாக செய்ய வேண்டிய வேலைகளை மத்திய அரசின் அமைச்சுக்கள் ஊடாகவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும் நிதி ஓதுக்கீடு செய்து வேலைகளை செய்வதென்பது மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மீளப்பறிப்பதற்கு சமனானவையாகும். இப்படிப்பட்ட செயற்திட்டங்களை மாண்புமிகு ஜனாதிபதியும், பிரதமரும் மீளாய்வு செய்ய வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் பகீரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் விடுத்துள்ள வேண்டுகோளில்,

13வது திருத்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்கள் ஊடாக சிறுபான்மை இனத்திற்கும் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டு இதில் ஒரு மாகாணமாக வடக்கு கிழக்கு மாகாணசபை அமைக்கப்பட்டது. இதற்கு தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு இம் மக்கள் ஆட்சி 1990ம்ஆண்டு 3ம் மாதம் வரையும் செயல்பட்டு மாகாணசபைக்கு அதிகாரங்களை கோரியதற்காக வடக்குகிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டது வரலாறாகும்.

ஆளுனரின் ஆட்சியிலிருந்த வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை 2006.06.30ம்திகதி வரையும் செயற்பட்டன. இந்த நிலையில் வடக்குகிழக்கு மாகாணம் இணைக்கப்பட்ட முறை தவறென நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக வடக்கு மாகாணசபை வேறாகவும், கிழக்கு மாகாணசபை வேறாகவும் பிரிக்கப்பட்டன.

கிழக்கு மாகாணசபைக்கு 2008, 2012ம் ஆண்டும் மாகாணசபைக்கென தேர்தல் நடத்தப்பட்டு 2017ம் ஆண்டு இறுதிக்கட்டங்களில் கிழக்குமாகாணசபையின் மக்கள் ஆட்சி கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். மாகாணசபை நிருவாகம் அண்ணளவாக 29 வருடங்கள் இயங்கி வருகின்றன. இம் மாகாணசபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் செயற்பாடென்பது குறைந்தது 12 வருடங்களே இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். ஏனைய 17வருடங்கள் மத்திய அரசாங்கத்தின் ஆளுனர் அவர்களின் நேரடிக்கட்டுப்பாட்டில் மாகாணசபை இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை ஏனைய மாகாணசபைகளைப் பொறுத்தவரையில் கிட்டத்தட்ட ஐந்து தடவைகளுக்கு மேல் தேர்தல் நடாத்தப்பட்டு மக்கள்பிரதிநிதிகள் ஊடாக ஆட்சி செய்யப்பட்டு நூற்றுக்கு மேற்பட்ட நியதிச்சட்டங்களை உருவாக்கி பலதரப்பட்ட அதிகாரங்களை அமுலாக்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

கிழக்கு மாகாணசபையைப் பொறுத்தவரையில் மாகாணசபை முறைமைகளை விரும்பியோ விரும்பாமலோ ஏனோ தானோ என அமுல்படுத்திய சந்தர்ப்பங்களும் உள்ளன. 2009ம் ஆண்டுக்குப் பின் மாகாணசபைக்கென பலகட்சிகள், பல அமைப்புக்கள் போட்டியுடன் போட்டி போட்டதற்குப் பிற்பாடே அதிகாரங்களை அமுல்படுத்துவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு பல அதிகாரங்களை அமுல்படுத்த முடியும். மக்கள் பிரதிநிதிகளின்றி ஆளுனரின் கீழ் நீண்டகாலமாக கிழக்கு மாகாணசபை செயற்படுவதன் காரணமாக அதிகாரங்களை அமுல்படுத்த முடியாது.

இந்த நிலையில் மத்திய அரசாங்கம் மாகாணசபைக்கு ஓதுக்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் உள்ள நிருவாக கட்டமைப்புக்கு நிதி ஓதுக்கீடு செய்யாமல் குறிப்பாக, உள்ள+ராட்சி, கிராமஅபிவிருத்தி, சமூகசேவை, போன்றவற்றிற்கு ஓதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசாங்கத்தின் அமைச்சுக்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக புதுப்புதுப் பெயருடன் நிதியை ஓதுக்கீடு செய்து மாகாணங்களுக்குள் மத்திய அரசின் ஆளுகைகளை நிலை நாட்டுவதற்கு முயற்சிப்பதென்பது ஒருகையால் வழங்கப்பட்ட அதிகாரத்தை மறு கையால் பறிப்பதற்கு சமனானவையாகும்.

இவைமட்டுமின்றி வளமுள்ள பாடசாலைகளையும், வளமுள்ள வைத்தியசாலைகளையும் மத்தி அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர முயற்சிப்பதும் மத்திய அரசின் கையாலாகாததனத்தை காட்டுகின்றன.

குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வளப்பற்றாக்குறை குறைந்த ஒரு பாடசாலையையும், ஒரு வைத்தியசாலையையும் இரண்டையும் மத்தியஅரசாங்கம் பொறுப்பெடுத்து செய்தால் அது வரவேற்கத்தக்கது. பலதரப்பட்ட முயற்சியுடன் வளங்கள் அற்ற நிலயில் அப்பாடசாலையின் அபிவிருத்தியுடன் அக்கறை உள்ள அமைப்புக்கள், கல்வியலாளர்கள், கல்விக்குழாம் போன்றோரின் அயராத உழைப்பின் காரணமாக உருவாக்கப்பட்ட பாடசாலைகளை வரிந்து கட்டிக் கொண்டு அமைச்சர்கள் மத்தியஅரசின் கீழ் எடுக்க முயற்சிப்பதென்பது மாகாணசபையின் வளங்களையும், சொத்துக்களையும், அதிகாரங்களையும் இல்லாமல் ஆக்கும் செயல்களே.

எனவே மத்திய அரசு மாகாணத்திற்கான அதிகாரங்களை இல்லாமலாக்கும் செயற்திட்டங்களை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.