மட்டக்களப்பில் 177, 178வது வீட்டுத்திட்டங்கள் சனிக்கிழமை மக்களிடம்

0
372

மட்டக்களப்பு மாவட்டடத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 2 வீடமைப்பு திட்டங்கள் எதிர்வரும் சனிக்கிழமை வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவால் திறந்து வைக்கப்படவுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் மா.ஜெகநாதன் தெரிவித்தார்.

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் சவுக்கடி கிராம சேவையாளர் பிரிவில் 26 வீடுகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள 177 அவது வீட்டுத்திட்டமான கற்பகதரு கிராமம், 24 வீடுகளைக் கொண்டதாக அமைந்துள்ள 178வது வீட்டுத்திட்டமான நெய்தல் கிராமம் ஆகியனவே சனிக்கிழமை காலை மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

நாடு பூராகவும் வீடற்ற மக்களின் வீட்டுத் தேவையை நிவர்த்தி செய்து நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கை அடிப்படையாகக் கொண்ட செமட்ட சவன – யாவருக்கும் வீடு திட்டம் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் 176 வீட்டுத்திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், 177 மற்றும் 178வது வீட்டுத்திட்டங்கள் இவையாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில்  இதுவரை 11 வீட்டுத்திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

7.5 இலட்சம் மானியத்துடன், காணியும் இலவசமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்டு இந்த வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

சுனிக்கிழமை காலை நடைபெறும் நிகழ்வில், இராஜாங்க அமைச்சர்கள், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், திணைக்களத்தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.