தொழிலாளர்களுக்கு அடுத்த மாத சம்பளம் 800 ரூபாயாக வழங்க 1350 மில்லியன் ஒதுக்கீடு – அமைச்சர் திகாம்பரம்

(க.கிஷாந்தன்)

பெருந்தோட்டத்துறையை அபிவிருத்தி செய்து அரசாங்க வருமானத்தை அதிகரிப்போம் என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரம் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் பொகவந்தலாவ பிரிட்வெல் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 155 தனிவீடுகள் அடங்கிய “வீ.கே.வெள்ளையன் புரம்” புதிய கிராமம் கையளிக்கும் நிகழ்வும், பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் நிகழ்வும் 24.02.2019 அன்று இடம்பெற்றது.

இதற்கு தலைமை தாங்கி உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

எமது மக்களுக்கு யார் நல்லது செய்கின்றார்களோ அவர்களுக்கு நன்றியுடையவர்களாக நாம் இருப்போம். மலையக மக்களுக்கு புதிய முகவரியை வழங்கியவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

இலங்கை வரலாற்றில் கடந்த 3 வருட காலமாக எமக்கு தனி வீடு திட்டம் ஆரம்பித்து மக்களுக்கு கையளித்து செல்கின்றோம். எமக்கென கால் அங்குலம் இடமும் கூட இல்லாத நிலையில் இந்த நல்ல அரசாங்கம் சொந்த நிலமும், அதற்கான ஒப்பனையும் தற்போது வழங்கி வருகின்றது.

கடந்த காலங்களில் எமது மலையக மக்களுக்கு விலாசம் என்றால் அந்த தோட்டம், இந்த தோட்டம், மேல்கணக்கு, பணிய கணக்கு, சின்ன கணக்கு என்ற சொல் இருந்தது.

இப்போது இங்கே வீ.கே.வெள்ளையன் புரம் அங்கே மகாத்மா காந்தி புரம் என ஒவ்வொரு பெயரிலும் கிராமங்கள் அமைந்துள்ளது. அங்கு தான் எமது கௌரவமும் இருக்கின்றது.

இந்த நிலையில் லயன் வாழ்க்கையயை மாற்றியமைத்து புதிய விலாசம் வழங்கியவர் எமது பிரதமரே ஆவார்.

இந்திய அரசாங்கம் மலையக மக்கள் மட்டுமன்றி வடக்கு, கிழக்கு மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் மூஸ்லிம் மக்களுக்கும் வீடுகளை அமைத்து கொடுக்கின்றனர்.

சிலர் நினைக்கின்றார்கள் எமக்கு மாத்திரமே விசேடமாக அபிவிருத்திகளை இந்திய அரசு செய்வதாக அதேநேரத்தில் நாம் இந்திய அரசு எமக்கே கூடுதலாக அபிவிருத்திகளை செய்ய வேண்டும்.

காரணம் நாம் இந்தியாவிலிருந்து வந்தவர்களாவர். நான் அரசாங்கத்திற்கு வந்ததன்பிறகு வீடுகள் மட்டுமல்ல பாடசாலைகளும் கொடுத்து நிறைய அபிவிருத்தி பணிகளை இந்திய அரசு செய்கின்றது.

இதை சரியாக பயன்படுத்தி மக்களை அபிவிருத்தி அடைய செய்ய வேண்டும். இதற்கு இந்திய அரசுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். சிலர் சம்பள உயர்வு பிரச்சினையை வைத்துக்கொண்டு தற்போது ஆடுகின்றார்கள். நேற்று முன்தினமே மக்கள் மீது அக்கறை இவர்களுக்கு வந்துள்ளது. நாம் இந்த மக்களோடு வாழ்ந்த வகையில் இந்த மக்களுக்கு ஆயிரம் ரூபாவும் சம்பளமாக கிடைத்தாலும் அது போதாது. நாம் ஆரம்பித்திலிருந்து மக்களுக்காக போராடி கொண்டிருக்கின்றோம்.

எமது மக்களை பற்றி தெரியாதவர்கள் வந்து கறுப்பு கொடிகளை காட்டி மக்களை பற்றி பேசுகின்றார்கள். தொழிலாளர் தேசிய சங்கம் கூட்டு ஒப்பந்தத்தில் இல்லை. மூன்று தொழிற்சங்கங்கள் மாத்திரம் சம்பள பிரச்சினையை பேசுகின்றது.

சம்பள பிரச்சினை தொடர்பில் நீதிமன்றம் சென்றாலும், இதில் தலை போட முடியாது என நீதிமன்றம் கம்பனியையும் தொழிற்சங்கமும் பேசி தீர்மானிக்க வேண்டும் என சொல்லியுள்ளது.

அதேநேரத்தில் திகா காட்டி கொடுத்தார் என சொல்லுகின்றனர். ஒரு காலமும் நான் காட்டி கொடுக்கவில்லை. திகா, ராதா, மனோ ஆகியோர் ஒற்றுமையாக இருக்கும் வரை எவரையும் காட்டிக்கொடுக்க போவதும் இல்லை.

இந்த நிலையில் பிரதமரிடம் சொல்லி சம்பளத்தில் தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது என தெரிவித்து வரவு செலவு திட்டத்தில் 1350 மில்லியன் ரூபாவை ஒதுக்க பிரதமர் சம்மந்தம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சம்பளத்தில் 750 ரூபா சம்பளத்துடன் 50 ரூபாய் இணைக்கப்பட்டு 800 ரூபாயாக சம்பளம் வழங்கப்படும். இது தேர்தல் காலம் எமது வாக்குகளை உடைத்தெறிய தோட்டம் தோட்டமாக வருபவர்களை நம்ப வேண்டாம். திகா, மனோ, ராதாவை நம்புங்கள்.

மக்களுக்கு அநியாயம் செய்தால் நாம் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். அதேநேரம் பிரதமரிடம் சம்பளத்தை உயர்த்தாவிட்டால் வெளியே செல்வோம் என சொல்லியதையடுத்து பிரதமர் உயர்த்தப்பட்டது. 20 ரூபாய் சம்பளம் என அறிந்து மேலும் 50 ரூபாவை வரவு செலவு திட்டத்தில் வழங்க தீர்மானித்துள்ளார்.

அந்தவகையில் பெருந்தோட்டங்களில் சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றியமைக்கவும் நாம் போராடி வருகின்றோம். அத்துடன் பெருந்தோட்டத்துறையை அபிவிருத்தி செய்து அரசு வருமானத்தையும் அதிகரிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.