வறுமையில் வாடும் ஆபத்தை தடுப்பதுடன், இயற்கை வளங்களையும் பாதுகாக்கவும்- ஆர்.துரைரெட்ணம்.

மட்டு. மாவட்ட மீனவர்கள் எதிர்காலத்தில் வறுமையில் வாடும் ஆபத்தை தடுப்பதுடன், இயற்கை வளங்களையும் பாதுகாக்கவும்- ஆர்.துரைரெட்ணம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடித்தொழிலை வாழ்வாதாரமாக மீனவர்கள் எதிர்காலத்தில் வறுமையில் வாடும் ஆபத்தை தடுக்கவும், மீன்பிடி இயற்கை வளங்களை பாதுகாக்கவும் அனைவரும் முன்னின்று செயற்பட வேண்டுமென முன்னாள் கிழக்கு மாகாண சபை சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மீன்பிடித்துறை அமைச்சருக்கு திங்கட்கிழமை (18) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாவிகள், கடல், குளங்கள், ஏனைய நீர் தேக்கங்கள் போன்றவற்றில் அண்ணளவாக பல்லாயிரக்கணக்கான முழுநேர மீனவர்களும், பகுதிநேர மீனவர்களும் மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனர்.
மாவட்டத்தைப் பொறுத்தவரையில் வருடா வருடம் தென்னிலங்கைப் பகுதியிலிருந்து வரும் வெள்ளம், மழை நீரால் கரையோரம் குறைந்தது 15க்கு மேற்பட்ட முகத்துவாரம் ஊடாக கடலுக்கு நீர் செல்லுவது வழக்கமாகும். இதன் காரணமாக வருடாவருடம் இம் மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்படுவது இயற்கையே. இம் மீனவர்களுக்கு மத்திய, மாகாண அரசுகள், ஏனைய நிதி நிறுவனங்கள் சிறப்பான முறையில் பலதேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிஅனர்த்தத்தினால் வெருகல் இருந்து துறைநீலாவணை வரையான கடற்கரை பிரதேசங்களில் பல்லாயிரக்கணக்கான இழப்புக்களை உயிர்சேதம், பொருட்சேதங்களை சந்தித்தது வரலாற்றில் மறக்க முடியாத சம்பவமாகும்.
இச் சுனாமி ஊடாக மீன்பிடி கட்டிடங்கள், மீன்பிடி உபகரணங்கள் பல இடங்களில் தேவைக்கு அதிகமாக வழங்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. இதேவேளை மாவட்டத்திலுள்ள அரசாங்க அதிபர், பிரதேசசெயலாளர்கள், கிராம சேவையாளர்கள்,மாவட்ட மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள் (மத்திய, மாகாண அரசு) ஏனைய நிதி நிறுவனங்கள் போன்றோரின் அயராத ஒத்துழைப்பின் காரணமாக, நல்ல திட்டங்கள் காரணமாக ஒரளவிற்கு மீனவர்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். திணைக்கள அதிகாரிகளின் சரியான ஒத்துழைப்பே முன்னேற்றத்திற்கு காரணங்களாகும்.
மாவட்டத்திலுள்ள மீனவர்களுக்கு 2001ம் ஆண்டு ஜனவரிமாதம் 15ம் திகதி வெளிவந்ததை மீன்பிடி அமைச்சின் 1167ஃ3ஆம் இலக்க வர்த்தமானியை முழுமையாக  அமுல்படுத்துவதுடன்,  400ற்கு மேற்பட்ட மீன்பிடி படகுகளை தரித்து நிறுத்துவதற்கு இறங்குதுறை அமைத்தல், ஐஸ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மீண்டும் ஆரம்பித்தல், மீனவர்கள் பயன்படுத்தும் கரையோரங்களை வேறு தேவைக்கு பயன்படுத்தாமல் தடுத்தல், அனுமதியற்ற மீன்பிடியை தடுத்தல், அனுமதியற்ற மீன்பிடியை கட்டுப்படுத்த கடற்படை, பொலிசாரிடம் ஒப்படைத்தல், மீன்பிடிச் சங்கங்களை புனருத்தாரணம் செய்து வலுவான மீன்பிடி சமாசத்தை கட்டியொழுப்பி சரியான வேலைத்திட்டங்களை முன்வைத்தல் உளளிட் பல்வேறு வேலைத்திட்டங்கள் விரைவில முன்னெடுக்கப்பட வேண்டும்.
மேலும் திணைக்களங்களுக்குத் தேவையான வளங்களை அமைச்சு, மாகாண சபை பகிர்ந்தளிப்பதோடு, ஆள்பற்றாக் குறையையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் வருடம் தோறும் இயற்கை மாற்றம் ஏற்படுவதன் காரணமாக கடல் பகுதியிலும் வாவிகள், குளங்களில் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதில்லை. இக்கால கட்டத்தில் மீனவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
 வாவி, குளங்களில் இயற்கை சூழலுக்கு உட்பட்ட 15வகைக்கு மேற்பட்ட மீன் இனங்கள் அழிந்து விட்டன. இதை பாதுகாப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மாவட்டத்தில் வாவி, குளங்கள், கடல் போன்றவற்றில் மீன் இனங்கள், இறால் வகைகள் உற்பத்தியாகும் இடங்களையும், இயற்கைச் சூழலையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தல்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அமுல்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இம் மாவட்டம் மீன்பிடியில் இருந்து விடுபட்டு மீனவர்கள் வறுமையில் வாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.