உளவியல் ஆலோசனை மய்யத்தால் மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கும் பயிற்சி பட்டறையும்!

0
163
(கேதீஸ்)
உளவியல் ஆலோசனை மய்யத்தின் ஏற்பாட்டில் உளவியல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும், பயிற்சி பட்டறை செயலமர்வும்  இன்று(9) சனிக்கிழமை மட்/ கரடியனாறு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் அனுமதியுடன் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் இப்பாடசாலையில் ஆண்டு 10 தொடக்கம் உயர்தரம்வரை கல்வி பயிலும் சுமார் 100 க்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தேர்ச்சி பெற்ற வளவாளர்களான பியோ ஜூட் நவிந்தன் ( வேல்ட் விஷன் ஏறாவூர் பற்று முகாமையாளர்) சின்னத்துரை வென்ஜமின் ( வேல்ட் விஷன் அலுவலகர்) ஆகியோரால் நடாத்தபட்ட இக்கருத்தரங்கு, அண்மைக்காலத்தில் எமது பிரதேசங்களில் வயது வேறுபாடின்றி அதிகரித்துவரும் தற்கொலை சம்பவங்களை கருத்தில்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.   மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உளவியல் ஆசிரிய ஆலோசகர் ரி.குணரெத்தினம் மற்றும் பாடசாலை அதிபர் செந்தில்நாதன் ஆகியோரும் கலந்துகொண்டு கருத்துக்களை தெரவித்தது இருந்தனர்.

இது தொடர்பில் உளவியல் ஆலோசனை மய்யத்தின் தலைவர் செ.நிவேதித் மற்றும் ஊடக பேச்சாளர் ஜெய்காந் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில்,

குறிப்பாக நாட்டின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அண்மைக்காலங்களில் தற்கொலைச் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்றது. இதில் வயது வித்தியாசம் இல்லை. பிரச்சினைகளும் உயிரை மாய்த்துக்கொள்ளுமளவு தீவிரமானதாக இருக்கின்றதென்று சொல்லிவிடமுயாது. ஆனால் முடிவு மட்டும் தற்கொலை என்றாகிவிடுகின்றது. எனவே, நீண்டகால நோக்கில் இதனை தடுக்க ஒரு செயற்திட்டம் தேவையென உணர்ந்தோம்.

அதன்முதற்கட்டமாக இலங்கை, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஏனைய நாடுகளில் புலம்பெயர்ந்து அல்லது தொழில் நிமிர்த்தம் வசிக்கின்ற சமூக ஆர்வர்கள் ஒன்றிணைந்து “ உளவியல் ஆலோசனை மய்யம்” என்ற அமைப்பை உருவாக்கினோம். சமூக வலைத்தளங்கள்மூலம் அதனை மக்களிடம் கொண்டு சென்றோம். 24X7 மணிநேர தொலைபேசியூடான உதவிச்சேவை ஒன்றை ஆரம்பித்தோம். உதவிகோரி ஏராளமானோர் அழைப்புக்களை மேற்கொண்டனர். அவரவர் தேவைகளுக்கேற்ப பொருளாதார மற்றும் சட்ட, உளவியல் ஆலோசனைகளை வழங்கிவருகின்றோம்.

எமது நோக்கம் நீண்டகால நோக்கமுடையது. எமது இலக்கை முழுமையாக பூர்த்திசெய்ய சில ஆண்டுகள்கூட தேவைப்படலாம். அதனடிப்படையில்தான் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்ட கருத்தரங்குகளை ஏற்பாடு செய்ய முடிவுசெய்தோம். அப்பொழுதுதான் சாவால்களை எதிர்கொள்ளக்கூடிய சமுதாயமொன்றை கட்டியெழுப்பும் எமது பணியின் பூரணத்துவத்தை அடையமுடியும்.

ஒவ்வாரு பிரதேசத்திலும் பாடசாலை மற்றும் கிராம மட்டத்திலும் எமது செயற்பாடுகளை பரவலாக்கவுள்ளோம்.

மேலும், இச்செயற்திட்டங்களுக்கான நிதியீட்டங்கள் எமது உறுப்பினர்களது பங்களிப்பு மட்டுமே என்பதுடன் அதன் ஒழுங்கமைப்புக்களும் எமது உயர்மட்ட மற்றும் தன்னார்வ தொண்டர்களது முழுமையான சேவைநோக்கத்துடனான பங்களிப்பென்பதுடன், எதிர்வரும் காலங்களில் எம்முடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவங்களை வரவேற்கின்றோம் என்று கூறினார்கள்.

இன்று ஒரு முழுநேர பயிற்சியாக ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இச்செயற்திட்டத்தில்  உளவியல் ஆற்றுப்படுத்துகை தொடர்பான விளக்கங்களும் மன அழுத்தங்களை தவிர்த்தல்  ஆகியவை தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.

இன்றைய செயற்திட்டத்தில் ,உளவியல் ஆலோசனை மய்யத்தின் சார்பில் ரனிசியன் பாத்திலெட் (நிருவாக ஒருங்கிணைப்பாளர்), ரொஷாந் ( மக்கள் தொடர்பாளர்) ,சுதர்சன் ( இணைய, சமூக வலைத்தள பொறுப்பாளர்) ,ச.சிரஞ்சீவி ( நிதி பொறுப்பாளர்),  கு.விவேதா ( சிறுவர் மகளிர் நல பொறுப்பாளர்), ஜெ.சசிரூபன் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்) மற்றும் ஜெனி ஆகியோர் பங்குபற்றி சிறப்பாக வழிநடத்தியிருந்தனர்.

உளவியல் ரீதியான பிரச்சனைகளை கண்டறிதல் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளை காணுவதுடன் விழப்புணர்வுகளை ஏற்படுத்தும் முயற்சியாக இதுவரை 10 செயற்பாடுகளை உளவியல் ஆலோசனை மய்யம் செயற்படுத்தியுள்ளதுடன் கரடியனாறு மாகாவித்தியாலயத்தில் இன்று முழு நேர செயலமர்வு பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டதுடன் கடந்த 2019.02.01 (வெள்ளிக்கிழமை) அன்றும் இப்பாடசாலையில் கருத்தரங்கு ஒன்று நடாத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்