கும்புறுமூலை கிராமத்தில் 148வது மாதிரிக் கிராமம் திறப்பு

0
155

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கும்புறுமூலை கிராமத்தில் நிர்மானிக்கப்பட்ட 148வது மாதிரிக் கிராமமான பழமுதிர்ச்சோலை வீடமைப்புத் திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் க.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.உதயகுமார், வாழைச்சேனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்ஜித், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, சில பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், ஐக்கிய தேசியகட்சியின் அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ் வீட்டுத் திட்டமானது பயனாளிகளின் மூன்று இலட்சம் ரூபாய் பங்களிப்புடனும், வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சின் ஐந்து இலட்சம் ரூபாய் மானியம் நிதியளிப்பிலும் கொண்டதாக அமையப் பெற்றுள்ளது.

இதன்போது இருபது பயனாளிகளுக்கு அபிவிருத்தி செய்யப்பட்ட காணித் துண்டுகள் வழங்கல், ஒரு இலட்சம் ரூபாய் வீதம் விசிறி கடன்களுக்கான பணம் நூறு பேருக்கும், 321 பயனாளிகளுக்கு வீடமைப்பு உதவி ஐந்து இலட்சம் ரூபாய் உதவி தொகை, 25 பயனாளிகளுக்கு வீடமைப்பு கடன் ஐந்து இலட்சம் ரூபாய் உதவி தொகை என்பன வழங்கி வைக்கப்பட்டதுடன், பழமுதிர்ச்சோலை வீடமைப்புத் திட்ட இருபது பயனாளிகளுக்கு வீட்டின் ஆவணப் பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இருநூறு பேருக்கு மூக்கு கண்ணாடிகள், கலைஞர்கள் மூவருக்கு இருபத்தையாயிரம் ரூபாய் மருத்துவ செலவுக்காக கலாசார அலுவல்கள் அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைத் தோட்டம் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாட்டு ஆவணங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததை அமைச்சர் பார்வையிட்டதுடன், பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள இருபது வீடுகளில் சிறந்த முறையில் பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டவர்களுகளில் முதலாம் இடத்தினை பெற்றவருக்கு பதினையாயிரம் ரூபாய் பணமும் சான்றிதழும், இரண்டாம் இடத்தினை பெற்றவருக்கு பத்தாயிரம் ரூபாய் பணமும் சான்றிதழும், மூன்றம் இடத்தினை பெற்றவருக்கு ஐயாயிரம் ரூபாய் பணமும் சான்றிதழும் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றதுடன், பழமுதிர்ச்சோலை வீடமைப்புத் திட்ட மக்கள், ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களால் அமைச்சர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் ஒவ்வொரு பயனாளிக்கும் பதின்மூன்று பேர்ச் காணி அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதுடன், இம்மாதிரிக் கிராமத்திற்கு தேவையான சில அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் சிரேஸ்ட மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் மேலும் தெரிவித்தார்.