பின்தங்கிய 15 ஆம் கிராமத்தில் முதன் முதலாக மருத்துவத்துறைக்கு தெரிவான விவசாயியின் மகன்

பின்தங்கிய 15 ஆம் கிராமத்தில் முதன் முதலாக மருத்துவத்துறைக்கு தெரிவான விவசாயியின் மகன் மாணவன் கிரிசாந்

குடும்பக் கஷ்டம் உணர்ந்து வைராக்கியத்துடன் படித்தேன் என்கிறார்!

(செ.துஜியந்தன்}

இம்முறை வெளியாகியுள்ள க.பெ.த.உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகளில் கிராமப்புற மாணவர்களும் சாதனை படைத்துள்ளார்கள்.

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பின்தங்கிய 15 ஆம் கிராமத்தில் இருந்து மருத்துவத்துறைக்கு மாணவன் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முருகமூர்த்தி கிரிசாந் எனும் மாணவனே மருத்துவத்துறைக்கு தெரிவாகியுள்ளார். இவர் ஏ,2 b சித்திகளைப்பெற்று அம்பாறை மாவட்டத்தில் 13 ஆம் நிலையில் இடம் பிடித்துள்ளார்.

15 ஆம் கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பமான முருகமூர்த்தி புஸ்பராணி தம்பதிகளின் இரண்டாவது புதல்வன் மாணவன் கிரிசாந். இவர் தனது ஆரம்பக் கல்வியை 15 ஆம் கிராமம் விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் கற்றுள்ளதுடன் க.பொ.த.சாதாரணப் பரீட்சையில் ஒன்பது படங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளார்.

உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் தனது உயர்கல்வியை துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் கற்றுள்ளார். அங்கு 2016 இல் முதல் தடவையாக பரீட்சைக்குத் தோற்றியவர் மூன்று பாடங்களிலும் b சித்திகளைப் பெற்றுள்ளார்.

இரண்டாவது தடவையாக 2017 இல் பரீடசைக்கு தோற்றியவர் ஏ.2bசித்திகளைப்பெற்று மாவட்டத்தில் 49 நிலையில் சித்தியடைந்திருந்தார்.

அதன் பின்பு மூன்றாவது தடவையாக 2018 இல் பரீட்சைக்குத் தோற்றியவர் இம்முறை ஏ. 2bசித்திகளைப்பெற்று அம்பாறை மாவட்டத்தில் 13 ஆம் நிலையில் இடம் பிடித்துள்ளார்.

முயற்சி திருவினையாக்கும் என்பதற் இணங்க வைராக்கியம், அயராத உழைப்பு, பெற்றோரின் ஊக்குவிப்பு ஆகியவற்றுக்கு இடையில் படித்து வைத்தியராக வரவேண்டும் என்ற தனது சிறுவயது கனவை நனவாக்கியுள்ளதாக மாணவன் கிரிசாந் கூறுகின்றார்.

குடும்பக் கஷ்டத்தையும், சிறுவயது கனவு இலட்சியத்தையும் மனதில் சுமந்து வைராக்கியத்துடன் படித்து இலக்கை எட்டியதில் மகிழ்சியடைகின்றார்.

ஒரு விவசாயின் மகன் இன்று அக் கிராமத்தின் முதல் வைத்தியராக வைத்தியத்துறைக்குள் நுழைவது 15 ஆம் கிராம மக்களையும் பெருமைப்பட வைத்துள்ளமையினால் அம் மாணவனுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்துவருகின்றன.

வாழ்த்துக்களை மட்டுமல்ல இவ் ஏழை மாணவனின் உயர் கல்விக்கு சமூக ஆர்வலர்கள் கை கொடுத்து உதவ முன்வரவேண்டும்.