மனிதர்களால் ஏற்படும் அனர்த்தங்களைத் தடுக்கத் தயாராக வேண்டும். – மட்டு அரசாங்க அதிபர்.

0
424

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கின்ற அதே வேளையில் மனிதர்களினால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குரிய ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம் என மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் புதன் கிழமை (26.12.2018) காலை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு 2018ல் உரையாற்றும் போதே மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமதி ஆழிப் பேரலை அனர்த்தமானது மிக கொடூரமான அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது. அது போன்ற அனர்த்தங்களினால் தங்களுடைய உறவுகளின் இன்னுயிர்களை நீத்ததற்காகவும் உடமைகளை இழந்ததற்காகவும் உலகம் பூராகவும் இவ்வாறான அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் அஞ்சலியினைச் செலுத்தியவனாக.

2004ஆம் ஆண்டு இடம்பெற்ற அனர்த்தத்தினைத் தொடர்ந்து எங்களுடைய நாட்டில் இன்றைய தினதினை பாதுகாப்பு தினத்தினை பாதுகாப்பு தினமாகப் பிரகடனப்படுத்தி ஆண்டு தோறும் நினைவு கூருவது, அதற்கு மேலதிகமாக எதிர்காலத்தில் ஏற்படுகின்ற அனர்த்தங்கள் தொடர்பாக நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சரியான பாதுகாப்பு நடவடிக்கை சம்பந்தமாக எம்மை நாம் மறு பரிசீலனை செய்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இழப்புகளை எவ்வாறு குறைத்துக் கொள்ளலாம் என்பது சம்பந்தமாக உறுதிபூணுவதற்குமாகும்.

சுனாமி அனர்த்தத்தினால் எங்களுடைய நாட்டில் 35ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன. மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் 2136 உயிர்கள் இழக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிகழ்வினுடைய சோகமான சம்பவம் மறையாத இச் சந்தர்ப்பத்தில் தொடர்ந்தும் பல்வேறு விதமான அனர்த்தங்களை எதிர் நோக்குகின்ற மாவட்டமாக எமது மாவட்டம் இருக்கிறது.

அந்த அடிப்படையில் சுனாமி, வரட்சி, வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்கள் இருக்கிறது. அதற்கும் மேலதிகமாக மனிதர்களால் ஏற்படுகின்ற அனர்த்தங்களான மண் அழிவு, காடழிவு, வளங்களின் சுரண்டப்படல் எனப் பல்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் இந்த மாவட்டத்தில் நாங்கள் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கின்ற அதே வேளையில் மனிதர்களினால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குரிய ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அரசாங்க உத்தியோகத்தர்களாகிய நாங்கள் எங்களுடைய மாவட்டம் சார்பாகக் கருத்தில் கொண்டு இந்தப்பிரதேசத்தில் ஏற்படக்கூடிய இவ்வாறான அழிவுகள் சம்பந்தமாக பாதுகாப்பினை மேற்கொள்வதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும்.

அண்மையில் வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவு போன்ற மாவட்டங்கள் வெள்ளத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதை அறிவீர்கள். இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்ற வேளை நமது மாவட்டத்திலும் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. அதற்கான திட்டங்களை வகுத்தாக வேண்டும்.

குறிப்பிட்டளவான உத்தியோகத்தர்கள் இது தங்களுடைய தொழிலல்ல தரப்பட்ட கடமைகள் அல்ல என்று தெரிவிக்கின்ற சந்தர்ப்பத்தை நான் அறிந்திருக்கின்றேன். அவ்வாறான நிலையில் இருந்து நாம் மாற வேண்டும் இது எம்முடைய சமூகம் சார்ந்த, உணர்வு சார்ந்த மக்கள் சார்ந்த, எங்களுடைய உறவுகள் சார்ந்த கடமை என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தாங்களாகவே முன்வந்து செயற்படவேண்டும். அதற்காக இன்றைய தினத்தில் திடசங்கல்பம் பூண்டு கொள்ள வேண்டும். இதற்கான ஏற்பாடே இந்த பாதுகாப்புதின நிகழ்வாகும்.

எதிர்காலத்தில் ஏற்படுகின்ற அனர்த்தங்களுக்கான மனதில் வைத்துக் கொண்டு எம்முடைய மாவட்டத்திலுள்ள மக்களை இவ்வாறான அனர்த்தங்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது சம்பந்தமாகத்தான் மாவட்டத்தில் அனர்த்தத்துக்கான விசேட செயலணியிiனை உருவாக்கியிருக்கிறோம்.

அதன் ஏற்பாடுகள் அரசாங்க உத்தியோகத்தர்கள் தொடக்கம், கிராம அமைப்புக்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. முன் அறிவிப்பு செயற்பாட்டின் ஊடாக உங்களுக்கான அறிவித்தல் பொறிமுறைகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த அடிப்படையில் பல்வேறு மட்டங்களில் அனர்த்தம் சம்பந்தமான அறிவித்தல் கிடைக்குமாக இருந்தால் இந்த தொடர்பாடல் ஊடாக மிக விரைவாக சமாந்தரமாக தகவல்கள் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே போல பாதுகாப்புத் தரப்பினர், ஊடகமும் உள்வாங்கப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் அமைச்சின் ஊடாகவும், மாவட்ட செயலகம் ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பல்வேறு வகையில் அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற எமது மாவட்டத்தில் சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த பிரஜைகளாக எதிர்காலத்தில் இவ்வாறான அழிவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்ற பொழுது அவற்றில் இருந்து எங்களது பொதுமக்களை, உறவுகளைக் காப்பது உங்களுடைய தனிப்பட்ட உயிர்களைப் பாதுகாப்பது பற்றிய அறிவினைப் பெற்று செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.