மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் ஒரே முறையில் மாணவர்களுக்கு சிகை அலங்காரம் செய்யப்பட வேண்டும்.

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள மாணவர்களுக்கு நவீன முறையில் இல்லாது, ஒரே முறையில் சிகை அலங்கார செய்யப்பட வேண்டும். என்ற கருத்தினை மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் மு.அருட்செல்வம் இன்று(21) பிரதேசசபையின் அமர்வின்போது முன்வைத்தார்.

சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில் நடைபெற்ற போதே, இதனை குறிப்பிட்டார்.

பாடசாலைகள் அனைத்தும் புதிய வருட கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் தை மாதம் 2ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனால் மாணவர்கள் சிகை அலங்காரம் செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர். பிரதேசத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் நவீனமுறையில் இன்றி ஒரேமுறையில் சிகை அலங்காரம் செய்யவேண்டும். இதற்காக சிகை அலங்கார உரிமையாளர்கள் அனைவருக்கும் உடனடியாக அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். என்ற பிரதேசசபையின் உறுப்பினரின் கருத்துக்கு சபை ஆதரவு தெரித்ததுடன் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மகிழடித்தீவு சந்தியில் இருந்து மண்முனைப்பாலம் வரை செல்கின்ற வீதி உடைந்து குன்றும், குழியுமாக காணப்படுகின்றது. இதனால், கனியவளங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் இவ்வீதியால் சென்றால், வைத்தியசாலையின் காவுவண்டிகள் அவசரமாக செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது. அதேபோன்று இதனால் பயணம் செய்கின்ற பயணிகளும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்காக கனியவளங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை இவ்வீதியின் ஊடாக, குறித்த வீதி புனரமைப்பு செய்யப்படும் வரை செல்வதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற பிரேரணையை முன்வைத்தற்கமைய உரிய பிரேரணை முன்மொழியப்பட்டு உரிய திணைக்களங்களுக்கு உடனடியாக அறிவிப்பதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.