எமது கௌரவத்தை கெடுத்தே வியாழேந்திரன் மகிந்த பக்கம் சென்றார் .

0
625

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனநாயகத்தின் பாதையில் சென்றதாலேயே மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சித்தாண்டியில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக் கிளை புனரமைப்பது தொடர்பான கூட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் “ தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைக்க முடியாது என சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் எமக்கு கௌரவம் இருந்தது. இந்த கௌரவத்தை கெடுக்கும் வகையில் ஒருவர் சென்றுவிட்டார். அவர் மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ள குழுவினருடன் இணைந்து வருவதற்கு பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக அறியமுடிகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தங்கேஸ்வரி, பியசேன போன்றவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பின்னர் தேர்தலில் தோல்வியை சந்தித்திருந்தனர். அதேபோன்று தற்போது வியாழேந்திரன் சென்றுள்ளார்“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே பெரும்பாலான எமது மக்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். இதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பதவிக்கு வருவதற்கு இடமளிக்க கூடாது என குறிப்பாக வன்னிப் பிரதேசத்திலிருந்து பல குரல்கள் வந்தன. அதன் அடிப்படையில் நாங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கினோம். யார் வெல்வது என்பது முக்கியமல்ல யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே எமக்கு முக்கியம்.“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தங்கள் பக்கம் சேர்ப்பதற்கு 30 கோடி முதல் பேரம் பேசப்பட்டதாக ஜனாதிபதியே தனது உரையில் குறிப்பிட்டடிருந்ததாகவும் இதன் போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் சித்தாண்டி வட்டார உறுப்பினர் மு.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம்இ மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஆதவன்