இலங்கையின் தேசிய நீரோட்டத்தில் மலையகமக்கள் இன்னும் இணைக்கப்படவில்லை

 

இலங்கையின் தேசிய நீரோட்டத்துடன் மலையக மக்கள் இன்னும் இணைக்கப்ப
டவில்லை!
மனித அபிவிருத்திதாபனம் வெளியிட்டுள்ள ஊடகஅறிக்கையில் தெரிவிப்பு
(காரைதீவு  நிருபர் சகா)
 
இலங்கையின் தேசிய நீரோட்டத்துடன் மலையக மக்கள் இன்னும் இணைக்கப்படவில்லை என்று 
அனைத்துலக மனிதஉரிமை சாசனத்திற்கு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதை யொட்டி மனித அபிவிருத்திதாபனம் வெளியிட்டுள்ள ஊடகஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 
அனைத்துலக  மனித உரிமை சாசனத்திற்கு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், 150 வருட வரலாற்றை கொண்ட பெருந்தோட்ட மக்களின் வாழ்நிலை?….  இன்னும் தேசிய நீரோட்டத்துடன் இணைக்கப்படாத ஒரு மக்கள் கூட்டமாகவே வாழ்ந்து வருகின்றனர். இலங்கையின் தேசிய நீரோட்டத்துடன் மலையக மக்கள் இன்னும் இணைக்கப்படவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை ஆகும்.     
  
அனைத்துலக மனித உரிமை பிரகடனம் உருவாக்கப்பட்டு நாடுகள் அதனை உள்வாங்கி 70 வருடங்கள் பூர்த்தியாகின்ற வேளையில் இலங்கையில் மலையக மக்கள் 150 வருடங்களுக்கு மேலாக ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகின்ற போது மிகவும் பின்தள்ளப்பட்ட சமூகமாகவே வாழ்கின்றனர். அனைத்துலக மனித உரிமை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் மறுக்கபட்டவர்களாக இன்றும் காணப்படுகின்றனர். குறிப்பாக, 
உறுப்புரை 17 – காணி, நில உரிமை  
உறுப்புரை 23,24, – தொழில் உரிமை    
உறுப்புரை 25 – உணவு, உடை, வீட்டுவசதி மருத்துவ வசதி அவசியமான சமூக சேவைகள்.
 
போன்ற முக்கியமான உரிமைகள் இம்மக்களை பொருத்தவரையில் கேள்விக்குறியாகவே? இருக்கின்றது. 
அனைத்துலக மனித உரிமை பிரகடனமானது  எந்த இனத்தவராக, மதத்தவராக, எந்த நிறத்தவராக, எந்த நாட்டை சேர்ந்தவராக, எந்த மொழியை பேசுகின்றவராக, எந்த அரசியல் பிண்ணனியை கொண்டவராக, எந்த சமூக கட்டமைப்பை கொண்டவராக  இருப்பினும் சரி, அனைவரும் சமமானவர்கள் – சுதந்திரமானவர்கள் – சம உரிமையுடையவர்கள் என்ற விடயத்தை குறித்து நிற்கின்றது. ஆனால் பெருந்தோட்ட மக்களின் வாழ்நிலையோடு மேற்படி விடயங்களை ஒப்பிடும் போது அவர்கள் இன்னும் அரை அடிமைகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.  
  
ஆனால் தனிப்பட்ட மனிதர்களுக்கிடையில் குடும்பங்களில் அல்லது சமூகத்தில் மனித உரிமைகள் மீறப்படும் பொழுது மக்கள் தங்களுடைய உரிமைகள் பற்றி சிலர் அறிந்திருக்க, பலர் தெளிவில்லாமல் இருக்கின்றனர் அல்லது சகித்துக்கொள்கின்றனர். எனவே தான் மனித அபிவிருத்தி தாபனம் மனித உரிமைப் பற்றிய விழிப்புணர்வையும் கல்;வியையும் கிராமிய தோட்ட மக்களிடையே பரப்பிவருகின்ற அதேவேளை மனித உரிமை ரீதியான தலையீடுகளையும் மேற்கொண்டு வருகின்றது.  
மேற்படி நிகழ்வை  மனித அபிவிருத்தி தாபனம், தொழிலாளர் ஒத்துழைப்பு சங்கம் மற்றும் பெண்கள் ஒத்துழைப்பு முன்ணணியும் இணைந்து நடாத்தியது. இந்நிகழ்வுக்கு ஆசிரியர்கள், அரசாங்க சேவையாளர்கள், சட்டதுறை சார்ந்தவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள்  பங்குபற்றி சிறப்பித்தனர்.
 
மனித அபிவிருத்தி தாபனமானது பெருந்தோட்ட மக்களின் மனித உரிமைகளுக்காக தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் குரல்கொடுத்து வருகின்ற நிறுவனமாகும். அந்தவகையில் மனித அபிவிருத்தி தாபனமானது டிசெம்பர் 10 ம் திகதி அனைத்துலக  மனித உரிமை தினத்தை முன்னிட்டு கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களில் விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுப்பட்டுள்ளது. 
 
அனைத்துலக  மனித உரிமை சாசனம் வெளியிடப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. சமூக பொருளாதார, அரசியல் பண்பாட்டு துறைகளிலே உலகம் பல மாற்றங்களை கண்டுள்ளது. 1948 டிசெம்பர் 10 ம் திகதி ஐ.நா. பொதுசபை மனித உரிமை பிரகடனத்தை வெளியிட்டது.  பின்பு சபையானது நாடுகள் அல்லது ஆள்பலங்களின் அரசியல் அந்தஸ்த்துக் காரணமாக எவ்வித வேறுபாடும் இல்லாவகையில் எல்லா பாடசாலைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் பரப்பவும், காட்சிக்கு வைக்கவும் அங்கத்துவ நாடுகள் யாவற்றையும் கேட்டுக்கொண்டது. 
 
உலகின் பல்வேறு நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் பெருந்தோட்டத்துறை முக்கியமான வகிபாகத்தை கொண்டுள்ளது. கடந்த சில தசாப்தங்களில் சர்வதேச நிதி நெருக்கடிகளும், பொருளாதார அரசியல் துறைகளில் ஏற்பட்ட அடிப்படை மாற்றங்களும், நுகர்வோர், உற்பத்தியாளர் வர்த்தக உறவுகளை மாற்றியமைத்துள்ளன. தொழிலாளர், மூலதனம், முகாமைத்துவம் போன்ற அம்சங்களைப் பொருத்தவரையும் கூட மீள்வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ளதுடன் இவை பல்வேறு தாக்கங்களைப் பதித்துள்ளது. 
இலங்கையின் பெருந்தோட்ட துறையானது, முதலில் தேசியமயமாக்கல் மூலமாகவும், பின்னர் தனியார்மயமாக்கல் மூலமாகவும் மாற்றங்களை சந்தித்துள்ளது எனினும் தொழிற்சங்கங்களின் பெருக்கத்தின் பின்னரும் கூட, பெருந்தோட்டதொழிலாளர்கள் சிவில், அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, அபிவிருத்தி உரிமைகளில் ஓரங்கட்டப்படுவது தொடர்கிறது.     
குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையும் கூட்டு ஒப்பந்தத்தின் மூலமாக சம்பள உயர்வு ஏற்படுத்தி கொடுக்கப்படும். ஆனால் இம்முறை கூட்டு ஒப்பந்தம் முடிவடைந்து பல மாதங்களாகியும் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மந்தக்கதியிலேயே நடைப்பெற்று கொண்டிருப்பதை அவதானிக்க கூடியதாயிருக்கின்றது. இலட்சக்கணக்கான தோட்டதொழிலாளர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியத்திற்கான உரிமை, மற்றும் வாழ்வாதார உரிமை பாதிக்கபட்டவர்களாக காணப்படுகின்றனர்.
நாட்டு மக்களின் நலன்களில் பொறுப்பு சொல்ல வேண்டிய அரசாங்கம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக பொறுப்பு கூறாமல் இருப்பது கேள்விக்குறியாகின்றது. ஆனால் தேர்தல் காலங்களில் இம்மக்களின் வாக்கையபகரிப்பதில் அரசியல் வாதிகள் காட்டும் அக்கறை இம்மக்களின் வாழ்வாதார உரிமை மற்றும் உழைப்புக்கேற்ற ஊதியத்தில் ஏன் மௌனம் சாதிக்கின்றனர்.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு சுதந்திர வர்த்தக வலய பெண்கள், புலம்பெயர் பெண்கள் மற்றும் மலையக தோட்டதொழிலாளர் பெண்களே முதுகெழும்பாய் இருக்கின்றனர். இவர்களே  இத்தோட்டதொழிலாளரின் 50 வீதத்திற்கு அதிகமானோர் பெண்தொழிலாளர்கள் ஆவர். கூட்டு ஒப்பந்தத்தில் மூலம் சம்பளம் கூடுகின்றதோ, இல்லையோ தொழிற்சங்கங்களுக்கான சந்தா பணமோ எந்த ஒப்பந்தமும் இல்லாமல் ஒவ்வொரு வருடமும் கூடிக்கொண்டே செல்கிறது.