களுவாஞ்சிக்குடி சந்தையில் சைக்கிள் பாதுகாப்பு நிலையம் அமைப்பதில் இழுபறி நிலை

0
585
களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் அமைக்கப்படவிருக்கும் பைசிக்கிள் பாது காப்பு நிலையத்தினை தடுத்து நிறுத்தும் வகையில் கமநல அமைப்பானது செயற்பட்டு வருகின்றமை மிகவும் மனவேதனைக்குரிய விடயமாகும். பல முறை அவ் அமைப்பினரிடம் கலந்தாலோசித்துள்ளோம். அவற்றிற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை இதனால் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியானது திரும்பிச் செல்லும் தறுவாயிலுள்ளதாக மண்முனை தென் எருவில்பற்று பிரதேசபை தவிசாளர் மற்றும்  பிரதேச சபையின் செயலாளரும் தங்களது ஆதங்கத்தை வெளியிடுகின்றனர்.

களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் அன்றாடம் வரும் மக்களின் துவிச்சக்கர வண்டிகள்,மோட்டார் சைக்கிள்கள் பாதுகாப்பான தரிப்பிடமின்றி வெட்டவெளிகளில் வைக்கப்படுகின்றது. இதனால் பறவைகளின் எச்சங்கள், வெயில்,மழை போன்ற வற்றின் காரணமாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றது. இந் நிலையில் இதற்கு கட்டணமும் அறவிடப்படுகின்றது. இதனால் தினமும் பொதுச் சந்தைக்கு வரும் நுகர்வோர்கள், வியாபாரிகள் என பலரும் பலத்த சிரமத்திற்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதற்கான பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுப்பது பிரதேச சபையினுடைய கடமை என்பதால்  பிரதேச சபையினரிடம் வினவியபோது  அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
இது தொடர்பில் அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
   எமது பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் மிகவும் பெரிய பொதுச் சந்தையாக காணப்படுவது களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையாகும். இச் சந்தைக்கு பல பிரதேங்களிலிருந்து   கூடுதலான  வியாபாரிகளும், நுகர்வோர்களும் நாளாந்தம் வருகை தருகின்றனர். இவர்களின் துவிச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் என்பனவற்றிற்கு பாதுகாப்பான இடத்தினை அமைத்துக் கொடுப்பது எமது கடமையாகும். இதனைக் கருத்திற் கொண்டு 10 இலட்சம் ரூபாய் பெறுமதியில் தற்காலிகமான தகரத்தினாலான பாதுகாப்பு நிலையமொன்றினை அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கும் தறுவாயில் தங்களது குளம் இதனால் பாதிப்படைவதாக கருதி அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
  நாங்கள் இவர்களுடன் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளை நடாத்தி பலதரப்பட்ட விளக்கங்களையும் எடுத்துரைத்துள்ளோம். அவர்கள்  அதற்கு செவிசாய்ப்பதாக இல்லை நாங்கள் குளத்தை நிரப்பி இதனை மேற் கொள்ளவில்லை மாறாக நிரந்தரமான பாரிய கட்டடம் ஒன்றாகவும் இதனை அமைக்கவில்லை இவ்வாறான  நிலையில் இதனை தடைபண்ணுவது மிகவும் கவலைக்குரியது. இதனை எதிர்வரும் ஒரிரு வாரங்களுக்குள் பிரதேச நலன்விரும்பிகள் ஒன்றிணைந்து இதற்கு தீர்வுகாண வேண்டும.; இல்லாத பட்சத்தில் வருட இறுதி என்பதால் இதற்கான நிதி திரும்பிச்செல்லும் நிலையேற்படும் என அவர்கள் இதன்போது தெரிவித்தனர்….பழுகாமம் நிருபர்