மழைகாலத்தில் முளைத்த காளான்கள்”

0
645

மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் போதும் பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்படும் காலப்பகுதியிலும் “மழைகாலத்தில் முளைத்த காளான்கள்” போன்று பல்வேறு கருத்துக் கந்தசாமிகள் வலம் வருவதும்,  எதிர்ப்புகள் வெளியிடப்படுவதும்  பருவகால மழை போன்று வருடா வருடம் இடம்பெறுகின்றது. பின்னர் மீண்டும் இது அடுத்த வருடம் தொடரும். இப்பின்னனியில்தான், பல்வேறு கருத்துக்களை விமர்சன ரீதியாக பகுத்தாய்ந்து இக்கட்டுரை அமைகின்றது. கருத்துக்கள் கூறுவதற்கு மேலாக ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய முடியுமா என்ற சிந்தைனையில் உருவானதே இது. அதனால்தான் சற்றுதாமதமாக இடம்பெறுகின்றது.

பரீட்சைப்பெறுபேறுகள் வெளியிடப்பட்டதும் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்பெற்ற மாணவர்களின் பெயர்களை காட்சிப்படுத்தி இப்பிள்ளைகளின் வெற்றிக்கு தாமே காரணம் என tuition masters ஒருபுறம் மார்தட்ட, மறுபுறம் பாடசாலை இது தங்களுடைய பாடசாலையின் வெற்றியாக மார்தட்ட  மொத்தத்தில் இது மாணவர்களின் வெற்றியாக, பெற்றோரின் வெற்றியாக ஒருவரும் குறிப்பிடவில்லை?  உண்மையில் இதில் வெற்றியாளர் யார்? எதற்காக இந்த வெற்றி? வெற்றி பெற்ற மாணவர் எதனை சாதித்துள்ளார்கள்? போன்ற கேள்விக்கு விடைதேட வேண்டியது அவசியமாகும்.

எல்லோருக்கும் தெரிந்தபடி இரு நோக்கங்களின் அடிப்படையில் இப்பரீட்சை நடைபெற்றாலும் அந்த நோக்கங்கள் நிறைவேறவில்லை என்பதுதான் உண்மை. அதற்கு பல்வேறு காரணங்கள் பின்னணியாக உள்ளது. அரச கொள்கை அமுலாக்கப்படும் விதம், பாடசாலையில் ஆசிரியரின் பொறுப்பு மற்றும் பெற்றோர்களின் அதீத ஈடுபாடு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

 1. பெற்றோர்கள் சார்ந்த விடயங்கள்.

புலமைப்பரிசில் பரீட்சை வறுமை காரணமாக தொடர்கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் திறமைமிகு மாணவர்களுக்கு அரசாங்கம் உதவித்தொகை வழங்கி அவர்களை தொடர்ந்து கற்கவைக்க ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும்.   ஆனால்  துரதிஷ்டவசமாக அரச உதவி யாருக்கு தேவைப்படுகின்றதோ அவர்களுக்கு தரப்படுத்தலின்  மூலமாக உதவி கிடைக்க பெறாமல் செய்யப்படுகின்றது.

அப்படியானால் இந்த கைங்கர்யத்தை செய்பவர்கள் யார்? அவர்கள்தான் தமது பிள்ளைகளின் கல்வியில் அதீத ஈடுபாடுகொண்ட பெற்றோர்கள். குறிப்பாக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் உயர் பதவிகள் வகிப்போர்,  உயர் வருமானம் பெறும்  குடும்பங்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், வைத்தியர்கள் என கல்வி கற்ற சமூகம்.  இவர்களின் குழந்தைகள் இயல்பாகவே கல்விநிலையில் உயர் இடத்தை தக்கவைப்பர் ஏனெனில் அவர்களுக்கு கல்வி கற்பதற்கான சூழல் மற்றும் உதவிகள் ஒத்தாசைகள் அதிகம் கிடைக்கும் அதன் காரணமாக அவர்களால் எப்பரீட்சையிலும் அதிகூடிய புள்ளிகள் பெற்று தேர்வாக முடியும். நிலமை இவ்வாறிருக்க இவர்களுக்கிடையில் காணப்படும் போட்டி மனப்பாங்கிற்கு பிள்ளைகள் பலிக்கடாக்கள் ஆக்கப்படுகின்றார்கள்.  அதனால் இப்பிள்ளைகளுக்கு இரண்டு மூன்று இடங்களில் மேலதிக வகுப்புக்கள் வழங்கப்பட்டு எப்பாடுபட்டாவது பிள்ளையை வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற எத்தனிக்கிறார்கள். ஆகையால் அதிக பிள்ளைகள் உயர் மதிப்பெண்களைப் பெறுகின்றார்கள். இதன் விளைவு மாவட்ட ரீதியான வெட்டுப் புள்ளி அதிகரிக்கிறது.

எனவே புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளி அதிகரிக்க மேலே குறிப்பிட்ட படித்த மற்றும் உயர் வருமானம் பெறும் பெற்றார்களே முழுமையான காரணமாகி ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவுத்தொகை கிடைக்காமல் செய்து விடுகின்றார்கள். இப்பெற்றார்கள் தமக்கு தெரியாமலே இரண்டு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றார்கள். ஒருபுறம் மாவட்ட ரீயான வெட்டுப்புள்ளியை அதிகரிக்க செய்கிறார்கள். மறுபுறம் ஏழை மாணவர்களுக்கு உதவுத் தொகை கிடைக்காமல் செய்கிறார்கள்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு எதிராக வாதங்கொள்வோரின் கருத்துப்படி 160 புள்ளியை பெற்ற பிள்ளை சித்தியடையவில்லை என்பது அநியாம் என்பதாகும். உண்மைதான் ஆனால் இந்த நிலமையை ஏற்படுத்தியவர்கள் அரசா? அல்லது பெற்றோர்களா?

பெற்றோர்ளே! ஒருபுறம் தமக்கு உதவுதொகை கிடைக்காது என்பதும் மறுபுறம் தமது பிள்ளைகள் ஏலவே பிரபல பாடசாலையில் கல்வி கற்கிறார்கள் என்பதும் இவர்களுக்கு நன்றாக தெரியும். பின்னர் ஏன் இவர்கள் விழுந்தடித்து பிள்ளைகளை இரண்டு மூன்று இடங்களில் இரவு 10 மணிவரை ரியூசனுக்கு அனுப்பி எப்பாடுபட்டாவது தங்களுடைய பிள்ளைகளை சித்தியடைய வைக்க முனைகின்றார்கள்.

காரணம்,

 • இப்பரீட்சை பெற்றோர்களின் (வரட்டு) கௌரவத்தை நிலைநாட்டுவதாக நினைக்கிறார்கள்.
 • தங்களால் செய்யமுடியாதை அல்லது தங்களது விருப்பங்களை பிள்ளைகளை கொண்டு நிறைவேற்ற முனைகின்றமை.
 • இந்த பரீட்சையின் நோக்கம் பற்றிய விழிப்புணர்வின்மை மற்றும் அதை ஏற்றுக் கொள்ளாமை.
 • இம்மாணவர்கள் அதிகம் நெருக்கப்படுவதனால் பிற்காலத்தில் படிப்பில் ஆர்வமற்றவர்களாக எதையும் சாதிக்க முடியாதவர்களாக வருகின்றார்கள் என்ற அடிப்படை அறிவு இல்லாமை.
 • 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைவரும் (35:35) சித்தியடைகிறார்கள்; என்பதை அறியாமை.
 • வெட்டுப்புள்ளிக்கும் சாதனைக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அறியாமை
 • மேலும் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளியைபெற்ற பிள்ளைகளில் 2%மானவர்கள் மட்டுமே உயர்கல்விக்கு செல்கின்றார்கள் என்பது பற்றிய அறிவின்மை.
 • வாழ்க்கையில் சாதிப்பதற்கு பரீட்சைப்புள்ளி மட்டும் போதுமானதல்ல வாழ்க்கைத்திறன் அவசியம் என்பது பற்றிய அறியாமை இப்படி பல்வேறுகாரணங்கள் உள்ளன.

அப்படியானால் சமூக அக்கறையுடையோர்களின் பொறுப்பு என்ன?

மேலே குறிப்பிட்ட படித்த மற்றும் உயர் வருமானம் பெறும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும். நீங்கள் அக்கறையுடையவர்களாய் இருந்தால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நகரப்புற பாடசாலை பெற்றோர்களுடன் கலந்துரையாடல்களை ஏற்படுத்துவோம். நீங்கள் எத்தனை பேர்கள் இதில் இணையத் தயாராயிருக்கிறீர்கள்? .பெற்றோர்களிடம் மேலதிக வகுப்புகள் இல்லாமல் பாடசாலைக் கல்வியைமட்டும் அடிப்படையாக கொண்டு தங்களுடைய பிள்ளைகளை பரீட்சை எழுத அனுமதிக்கும் படி கேட்போம். (பாடசாலையின் பொறுப்பை பாடசாலை சார்ந்த விடயங்களை குறிப்பிடும் போது சுட்டிக்காட்டலாம்) இதற்காக ஒத்த சிந்தனையுடையவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக செயற்படலாம்.

இவ்வாறு செய்யும் போது மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் புள்ளிகள் நிச்சயமாக குறைவடையும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மாவட்ட வெட்டுப்புள்ளிகளும் கூட குறைவடையும் அதன்மூலம் புலமைபரிசில் பெற தகுதியுடைய பிள்ளைகளுக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

அதேசமயம் படித்த மற்றும் உயர் வருமானம் பெறும் பெற்றோர்களின் பிள்ளைகள் வெட்டுப்புள்ளிக்கு குறைந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் இது அவர்களுக்கான பரீட்சையல்ல. பெற்றார்களும் ஆசிரியர்களும் தம் பிள்ளைகளின் உளவியலை புரிந்துகொண்டு அவர்களை தோல்வியடைந்தவர்களாய் அறிவிக்கும் இப்பரீட்சையில் மாற்றங்களை ஏற்படுத்த போராட்டங்கள் மேற்கொள்ளவேண்டும். அதுவே மாற்றத்தை ஏற்படுத்தும்.

நடிகர் விவேக் குறிப்பிட்டது போன்று குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள்.  உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் வலுக்காட்டாயமாக விதைக்க வேண்டாம்.

ஆன்மீகத்தில் அவர்களை வழிநடத்துங்கள். பெரியார்களை அவர்களுக்கு  அறிமுகப்படுத்துங்கள். தெருவில் இறங்கி, புழுதியில் விளையாடி, வேர்த்து விறுவிறுத்து வீடுவந்து சேரட்டும். பெண் குழந்தைகளை வீரத்தோடு வளர்த்தெடுங்கள்.  பிள்ளைகளை வாழ்க்கைத்திறனுள்ள சவால்களுக்கு முகங்கொடுக்கவும் துணிச்சலோடு, எதிர்நீச்சல் போடும் மனப்பான்மையுடனும் வளர்த்தெடுப்போம். போன்ற விடயங்கள் பெற்றோர்களுக்குப் புகட்டப்பட வேண்டும்.

 

 1. பாடசாலை சார்ந்த விடயங்கள்.

ஆசிரியர்களே! அதிபர்களே! மாணவர்களின் வெற்றியை பாடசாலையின் வெற்றியாக காட்டி மார்தட்டும் நீங்கள், அது உங்களால்தான்; வந்தது என்பதை நிருபித்துக்காட்ட முடியுமா? அப்படியானால் உங்களுடைய பாடசாலையின் பிரபல ஆசிரியர்களே தனியார் கல்வி நிறுவனங்ளில் பணம் உழைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றார்கள். உங்களுடைய பாடசாலைப் பிள்ளைகளை தனியார் வகுப்புக்களுக்கு செல்லாமல் உங்களுடைய ஆசிரியர்களை மட்டும் கொண்டு இப்பிள்ளைகளை கற்பித்து வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெறவைக்க உங்களால் முடியுமா? அப்படி செய்ய முடிந்தால் மாத்திரமே அது உங்களுடைய வெற்றியாக நிருபிக்க முடியும்.

சில ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களை தனியார் வகுப்பிற்கு வருமாறு வற்புறுத்தும் நிலையினை உங்களால் மாற்ற முடியுமா? புலமைப் பரிசில் பரீட்சையை இவர்கள் சிறந்த வியாபாரமாக இன்று மாற்றி விட்டார்கள். அதனால்தான்; 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இவர்கள் 3ம் ஆண்டிலேயே (தங்களுடைய வியாபார நடவடிக்கைகளை) ஆரம்பிக்கிறார்கள்.

பாவம் அப்பாவிப் பெற்றோர்கள், “எல்லா நாம்பனும் ஓடுது என்று வயிற்று நாம்பன் குட்டியும் வாலைக்கிளப்பிக்கொண்டு ஓடின”  கதையாக விரும்பியோ விரும்பாமலோ மற்றப் பெற்றார்களைப்  பார்த்து அனைவரும்  (தனியார் வகுப்பு) பிரதிபண்ணுகிறார்கள்.

ஒருசில சுயநலம் மிக்க பெற்றார்கள் (தந்களுடைய பிள்ளை முதலாம் ஆளாக வரவேண்டும் என்ற நிலைப்பாடு காரணமாக) மற்றும் குள்ள எண்ணம் கொண்ட சில ஆசிரியர்கள் பாடசாலையில் எந்தப் பரீட்சை பத்திரம் நடைபெற இருக்கின்றதோ அந்த பத்திரத்தை முன்கூட்டியே தமது பிரத்தியேக வகுப்பில் செய்ய வைப்பதனால் பாடசாலையில் அவர்கள் கூடுதல் புள்ளியை பெற முடிகின்றது. எவ்வாளவு கீழ்தரமான கேவலமான செயல் இது?

பாடசாலைகளில் கிரமாக பாடங்களை கற்பிப்பதில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே பெற்றார்கள் தங்களுடைய பிள்ளைகளை பிரத்தியேக வகுப்புக்களுக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகின்றது என்பதில் உண்மையிருக்கிறது. சில ஆசிரியர்கள் பிரத்தியேக வகுப்பு மாணவர்களில் காட்டும் அக்கறையை தங்களுடைய பாடசாலையில் காட்டினால் சிறப்பாக இருக்குமே ( இருப்பினும் ஒரு சில அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களின் சேவையை மறுக்க முடியாது)

ஒவ்வொரு பாடசாலையும் தங்கள் பிள்ளைகளை வேறு எங்கும் பிரத்தியேக வகுப்பிற்கு செல்லாமல் தங்களுடைய முயற்சியால் மட்டும் இப்பிள்ளைகளை சித்தியடையச் செய்ய செய்ய வேண்டும்.  கிராமப்புற பாடசாலைகளைப் பொறுத்தவரையில், பெரும்பாலும் மாணவர்கள்  பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருக்கிறார்கள் அல்லது மாணவர்களின் வெற்றிக்கு பாடசாலைகளும் ஆசிரியர்களுமே முழுக்காரணம். ஆதலால் வெற்றிக்கு அவர்கள் உரிமை கோரமுடியும். ஆனால் நகரபுற பாடசாலைகள் அவ்வாறு உரிமைகோர முடியாத நிலையிலிருக்கிறார்கள்.

அப்படியானால் சமூக அக்கறையுடையோர்களின் பொறுப்பு என்ன?

அதிபர்கள் ஆசிரியர்களுடன் இது தொடர்பாக கலந்தாலோசித்து ஆக்கபூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை இது சாத்தியமற்ற விடயமாக நீங்கள் கருதலாம்.

பொதுவாகவே மனிதர்களின் இயல்பு தங்களால் முடியாத அல்லது தங்களின் எல்லைக்கு அப்பாற்பட்ட விடயங்களை விமர்சிப்பார்கள். ஆனால் தங்களின் எல்லைக்குட்பட்ட விடயத்தை சிந்திப்பதுமில்லை. அவற்றை செயற்படுத்துவதுமில்லை.

மேலே குறிப்பிட்ட பெற்றோர், ஆசிரியர், அதிபர் அல்லது பாடசாலை சார்ந்த விடயங்கள் நமது சமூக கட்டுப்பாட்டிற்குட்பட்ட விடயங்கள். ஆனால் நமது எல்லைக்கு அப்பாற்பட்ட அரசாங்கத்தை மட்டும் இவ்விடயத்தில் அதிகம் விமர்சிக்கின்றோம். இது “அரசாங்கம் சாராய தவறனையை மூடினால் மட்டுமே நாங்கள் குடியை நிறுத்துவோம்” என்ற வாதத்திற்கு  ஒப்பானது.  அப்படியானால் அரசின் பங்கு இங்கு ஒன்றுமில்லை என்பதல்ல வாதம் ஆனால் ஆகக்குறைந்தது நமது எல்லைக்கட்பட்ட விடயத்தையாவது ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யலாமே என்பதுவே ஆதங்கம்.

 

 1. அரசு சார்ந்த விடயங்கள்.

இறுதியாக ஏற்கனவே குறிப்பிட்டது போன்று புலமைப்பரிசில் சார்ந்த பெரும் குற்றச்சாட்டுக்கள் அரசு சார்ந்தே அமைகின்றது. அதில் உண்மையில்லாமல் இல்லை. அனேகர் பில்லாந்து கல்வி முறையை இங்கு ஒப்பிடுகின்றார்கள், அதனால் எல்லாப் பாடசாலைகளுக்கும் ஒரேவிதமான (Equal resource allocation and equal standard) வளங்கள் பகிரப்பட வேண்டும் என்றும், எல்லாப் பாடசாலைகளும் ஒரே தரத்தில் பேணப்பட்டால் சிறந்த பாடசாலை என்ற கருத்து அவசியமில்லை என்பதும் இவர்களுடைய முக்கிய வாதமாகும்.

இவ்வாதம் ஒரு பேச்சுக்கு வேண்டுமானால் நான்றாக இருக்கின்றது. ஆனால் நடைமுறையில் நமது நாட்டில் இது சாத்தியமா? முதலில் நமது நாடு ஒரு ஜனநாயக நாடா என்பதே இங்கு சந்தேகமாக இருக்கிறது. எனவே பின்லாந்து கல்வி முறையை இங்கு ஒப்பிட்டு பேசுவது “மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதற்கு” ஒப்பானது. ஏனென்றால் கீழ்தரமான அரசியல், சமூக பொருளாதார, கலாச்சார, நிர்வாக நடைமுறைகளைக் கொண்ட ஒரு நாட்டில் நாம் வாழ்கின்றோம்.

அண்மையில் இத்தாலியில் பெற்றோலின் விலையை அரசு சதக்கணக்கில் அதிகரித்த போது, அங்குள்ள மக்கள் எல்லோரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைகளில் தமது வாகனங்களை நிறுத்திவிட்டு வீடு சென்று விட்டார்கள். பயந்து போன அரசு அடுத்த நாளே விலையை குறைத்து விட்டது. நமது நாட்டில் இதன் சாத்தியப்பாட்டை பற்றி நாம் சற்று சிந்திக்க வேண்டும்.

அப்படி ஒற்றுமையோடு மக்கள் இருந்தால் எல்லோரும் இணைந்து புலமைப்பரிசில் பரீட்சையை புறக்கணிக்க முடியும். இங்கு அரசு பெரும்பாண்மை இனத்தவர்களுக்கே வளங்களை சரியாக பகிராத போது எப்படி சிறுபாண்மையினத்துக்கு வளங்களை சரியாக பகிரும்? இங்கு “நீதியும், நியாயமும் அறமும் அவரவர் நலன் மற்றும் தேவை சார்ந்தே அமைகின்றது”

மேலைத்தேய நாடுகளில் ஒருவர் ஆசிரியராக வரவேண்டுமாயிருந்தால் அவர் “ ஆசிரிய உரிமம்/அனுமதிப்பத்திரம் (teaching license) இருக்க வேண்டும். அனுமதிப்பத்திரம் வழங்கும் நிறுவனங்கள் இலகுவாக அதை வழங்காது. ஒருவரின் சரித்திரத்தையே ஆய்வு செய்தே அதை வழங்கும். அங்கு ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகின்றது. அது உயர்ந்த அந்தஸ்துள்ள ஒரு தொழிலாக இருக்கிறது.

நம்முடைய நாட்டில் ஆசிரியர் உள்ளீர்ப்பு எவ்வாறு செய்ய செய்யப்படுகின்றது. இங்கே பட்டதாரிகள் போட்டிப் பரீட்சை கூட வேண்டாம் என்று உண்ணாவிரதம் இருந்து வேலை பெறுகின்றார்கள். அரசியல் நோக்கம் சார்ந்தே இங்கு அனைத்தும் நடைபெறுகிறது.

அப்படியானல் என்ன செய்யலாம்

 

ஒரு சில பரிந்துரைகள் சில கலந்துரையாடல்களிலிருந்து…..

 1. புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய மாணவர்களுக்கு மாத்திரம் இப்பரீட்சையை நடாத்தி அதிலிருந்து வெட்டுப்புள்ளி தீர்மானிக்கப்பட்டு புலமைப்பரிசில் வழங்கப்படலாம்.
 2. அல்லது பரீட்சை வழமை போன்று நடைபெற்று பெறுபேறுகளை வெளியிட முடியும் அதில் மாற்றம் அவசியமில்லை ஆனால் வெட்டுப்புள்ளி அறிவிக்கப்படக்கூடாது.
 3. பின்னர் அரசு புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை தகுதியுடையோரிடமிருந்து கோரமுடியம். அதாவது வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள். தகுதியற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அதாவது அரச ஊழியர்களின், உயர் வருமானம் பெறும் பெற்றோர்களின் பிள்ளைகள் விண்ணப்பிக்க முடியாது.
 4. கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களின் அடிப்படையில் வெட்டுப்புள்ளி தீர்மானிக்கப்பட்டு புலமைப்பரிசில்கள் வழங்க முடியும். தேவையானால் சிறந்த பாடசாலைக்கான அனுமதியினையும் வழங்க முடியும்.
 5. அதே போன்று வழமையில் இருக்கின்ற ஆகக்குறைந்த 70 (35:35) புள்ளிகளைப் பெறுபவர்கள் சித்தியடைதல் என்ற நடைமுறையை தொடர்ந்தும் பேணமுடியும்.
 6. அவ்வாறு செய்தால் மாத்திரமே மிகத்திறமையான மாணவ சமுதாயமொன்றை கட்டியெழுப்ப முடியும் அவ்வாறு இல்லாமல் குறித்த எண்ணிக்கையினை எல்லைக் கோடுகளாய்க்கொண்டு அந்த எண்ணிக்கைக்கு கீழ் வருவோரையெல்லாம் வெட்டுப்புள்ளி என்ற பெயரில் தேர்ச்சியற்றவர்களாக்கி மனமுடைய வைப்பது பொருத்தமானதல்ல.
 7. இதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் அவசியமற்ற நெருக்கீடுகளை குறைப்பதுடன் தொடர்தும் ஆர்வத்துடன் மாணவர்கள் கல்வியில் ஈடுபடவும் அது உதவும்.

எனவே மாற்றங்கள் பெற்றோர்கள், பாடசாலை மற்றம் அரசு என ஒவ்வொருவரும் தமது பங்கை சரிவர செய்தால் சிறந்த மாற்றத்தை நாம் ஏற்படுத்த முடியும். நீங்களும் இம்மாற்றங்களை அவசியம் ஏற்படுத்த வேண்டும் என நினைத்தால் இதை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

Written By:- N. Sabesan (sabesan10@yahoo.com)

Zonal Technical specialist – Education & Life skills (East)

Master of Business administration, Master of Arts in Sociology, Professional Master Degree – Leadership Development, Bachelor of special degree in Economic, high diploma in youth in development (reading)