ஓர் வாக்காளனின் அழுகுரல்

0
665

ஓர் வாக்காளனின் அழுகுரல

பதினெண் வயதிலென்னை
வாக்காளனாக்கி
என் வாசல் தேடி வந்து
திமிர் தந்தயென் வாக்கே
வாசம் மாறா அழகுடன்
எம் கொள்கை வெல்லும் தூதுவனாக்கி
வழியனுப்பியயென் பிஞ்சு விரல்களின்
இடுக்குகளிலுன் அன்றைய
திமிர் நாறி அசுர வெடுக்கென மணக்கிறது இன்று

கோவணமுமின்றி
அவசர அவசரமாய்
கோடிப்புறம் போகும்
இழிகுணமுனக்கு எதனால் வந்தது சொல்?

நீதியும் நேர்மையும் பொறையும்
இன்னுமுள்ள மாண்புகள் யாவையும்
கொண்டாய் நீயென்று
நான் கொண்ட புரிதலின்
கேவலத்தை நினைந்தழுகிறேன்
அது
துயில் கலைந்தும் போகாத் தூக்கமாய்
பெருத்த துயரென
வலிந்து தாக்குகிறது நெஞ்சை.

கத்தியோடு பாய்ச்சல்
கதிரையெறியுமுன் மூஞ்சு
படுவார்த்தை கிழிக்குமுன் வாய்
மிளகாய்த்தூளை வீசித்தாக்கும் தீரமென
ஜனநாயகப்படுகொலை புரியுமுன்
அத்தனை செயலாலும்
பார் தூற்றும் மன்றமாக்கினாய்
நீதிதேவதையின் ஆலயத்தை.

இனி இளையோர் அதனை
எங்ஙனம் பாடுவர்?

சுற்றுலாவுவோர் வந்து அங்கே படிந்த இரத்தக் கரையை
நினைந்தழும் ஒவ்வொரு கணமும்
மாசுபட்டுப்போகுமந்தக் கோயிலென்பதை
அறிவாயா?

………………….

அரசையூர் மேரா