தமிழ் மக்களின் நலன்களை பாதுகாக்கப் போவதில்லை.

0
617

இலங்கையின் தேசிய அரசியலில் தற்சமயம் நடந்த வருகின்ற மாற்றங்கள் தமிழ் மக்களின் நலன்களை பாதுகாக்கப் போவதில்லை. எனவே தமிழ் மக்களை தேர்தலுக்கு தயாராகுமாறு மு.கிழக்குமாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று(11) கருத்துதெரிவிக்கையிலே இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் தொடர்ந்தும் கூறுகையில்,

தேசியரீதியாக நடக்கும் மாற்றங்கள் என்பது பல பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வாக இடம் பெறவில்லை. கடந்த கால செயற்பாடுகளில் தாக்கங்களாகவே இவைகள் நடந்து வருகின்றன. இன்னும் முடிவுறவில்லை. தொடர்ந்த வண்ணமே இருக்கும். பல பலமான சக்திகளில் ஜனநாயகத்திற்கு எதிரான முரண்பாடுகள் காரணமாக சட்ட விதிமுறைகளை கையில் எடுத்துக் கொண்டு நடந்தேறி வருகின்றன. இலாபநட்டம் பார்க்க முடியாதளவிற்கு கொள்கை, தனிநபர், கட்சிகள், அதிகாரம், ஜனநாயகம், உழல்மோசடி,அந்நியர்களின்ஆதிக்கம் போன்ற முரண்பாடுகள் காரணமாக பேசித்தீர்க்க முடியாதளவிற்கு வலுப்பெற்றுள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் இவ் அரங்கேற்றம் என்பது புதிய விடயமல்ல. கடந்த காலங்களில் இப்படிப்பட்ட பல விடயங்கள் நடந்தேறியுள்ளன. ஆறு மணிக்கு அமைச்சர் பொறுப்புக்களை வழங்கி அதே ஆறுமணிக்கு வர்த்தமானி அறிவித்தலின்படி பராளுமன்றத்தைக் கலைப்பதற்கு அறிவுறுத்தல் விடுகின்ற அளவிற்கு முரண்பாடுகள் வலுவடைந்து தேசியஅரசியல் தேக்க நிலை அடைந்துள்ளது.

மாறிமாறி வருகின்ற இனவாத அரசு தங்களது ஆளுகைக்குள் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகளை கையாளுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் சிறுபான்மை கட்சிகள் தொடர்பாக ஆரோக்கியமான விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டுள்ளன. தேசிய அரசியலில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை சிறுபான்மைக் கட்சிகள் முன்னிறுத்தி எதிர்வரும் காலங்களில் சரியான முடிவுகளை எடுப்பதற்கு குறிப்பாக. தமிழ்த்தலைமைகள் தயங்கக் கூடாது.

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளும், தமிழ்பிரதிநிதிகளும், மலையக தமிழ் பிரதிநிதிகளும் ஒன்று சேர்ந்து தமிழர்களுக்குச் சார்பான ஒரு முடிவை எடுப்பதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென்பது எமது பலவீனத்தைக் காட்டுகின்றன. வடக்குக்கிழக்கிலும் தேசியக் கட்சிகளின் ஊடுருவல், தமிழ்கட்சிகள்மீது ஊடுருவியதும் புதிய விடயமல்ல. சந்தர்ப்பவாத அரசியல் என்பது சமூநலன் சார்ந்து இருக்க வேண்டுமே ஒழிய தனிநபர் நலன் சார்ந்து இருக்கக் கூடாது.

எனவே மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை பயன்படுத்திக் கொள்வதோடு தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அடுத்து வரும் மாதங்களில் நடக்கப் போகின்ற பாராளுமன்றம், மாகாணசபை தேர்தல்களில் சிறப்பான முறையில் செயலாற்றக் கூடியவர்களை தெரிவு செய்து வேட்பாளராக நிறுத்தி (80) எண்பது வீதத்திற்குமேல் தமிழ்மக்கள் வாக்களிக்கத் தயாராகுமாறு அறைகூவல் விடுவதோடு, எம்மைப் பொறுத்தவரையில் பல்லின மக்கள் வாழும் இம் மாவட்டங்களில் தமிழர்களுடைய வாக்குகளை சிதறடிக்காமல் சிதறடிப்பதற்காக கைக்கூலியாய இயங்குபவர்களோடு கூட்டுச் சேராமல் தமிழர்கள் பெரும்பான்மையாக ஏற்றுக் கொள்கின்ற கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து தமிழர்களுடைய பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வைப்பதற்கு தேர்தலில் களமிறங்குவதற்கு தயாராக இருக்கின்றோம். என்றார்.