திருகோணமலை மாவட்டத்தில் 1104 குடும்பங்கள் பாதிப்பு

0
177

தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் பல கிராமங்களைச் சேர்ந்த 1104 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நூற்றுக் கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

 

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவை வழங்கவும் அழிவு பதிவுகளை மேற்கொள்ளவும் திருகோணமலை அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் ஏற்பாடுகளை செய்துவருகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக பருவ மழை கடுமையாக தொடர்ந்து பெய்து வருகின்ற காரணத்தினால் கிண்ணியா, சேருவில, மூதூர், வெருகல், பட்டணமும் சூழலும் பிரதேசங்களைச் சேர்ந்த 997 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் கிண்ணியாவில் 17, வீடுகளும் மூதூர் நகரப்பகுதியில் தலா ஒரு வீடுமாக 19, வீடுகள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

விவசாய நிலங்களைக் கொண்ட இறால்குழி, பெரியவெளி, மணற்சேனை, மல்லிகைத்தீவு, மேன்காமம் ஆகிய கிராமங்களில் கடுமையான வெள்ளம் காரணமாக மக்கள் இடம் பெயர வேண்டிய அவல நிலை தோன்றியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை சேருவில, மூதூர், கிண்ணியா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 107 குடும்பங்கள் வெள்ளம் மற்றும் வீடு அழிவு காரணமாக இடம் பெயர்ந்து நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் அடைக்கலம் தேடி சென்றுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குவதற்கும் அழிவுற்ற வீடு மற்றும் விபரங்கள் தொடர்பில் அழிவு பதிவுகளை மேற்கொள்ள அனர்த்த முகாமைத்துவப்பிரிவு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்தார். இதுவரை திருகோணமலை பிரதேசத்தில் வெள்ள அனர்தம் காரணமாக இடைத்தங்கல் முகாங்கள் அமைக்கப்படவில்லையெனவும் அவ்வதிகாரி தெரிவித்தார்.