மலையக மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மட்டு. மாநகர சபையில் தீர்மானம்

0
344

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வுக் கோரிக்கை தொடர்பான போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாக மட்டக்களப்பு மாநகரசபiயினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் அண்மையில் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளரை பௌத்த தேரர் தாக்க முற்பட்டமை தொடர்பான செயற்பாட்டிற்கு எதிராகக் கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

வியாழக்கிழமை (01) இடம்பெற்ற மட்டக்களப்பு மாநகரசபையின் 11வது அமர்வின் போதே இத்தீர்மானங்கள் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபையின் 11வது அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மாநகரசபையின் மாதாந்த விடயங்கள் தொடர்பில் இன்றை கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. நிதிக்குழு மற்றும் சுகாதாரக் குழுக்களின் சிபாரிசுகள், மாதாந்த வரவு செலவு அறிக்கை தொடர்பான விடயங்கள் மற்றும் மாதாந்த கொடுப்பனவு, கொள்வனவு விடயங்கள் உட்பட வருடாந்த குத்தகை தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.

இன்றைய அமர்வின் விசேட அம்சமாக சம்பள உயர்வு கோரி வெகு நாட்களாகப் போராடி வரும் மலையக தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையான 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தியும், அவர்களது நியாயமான போராட்டத்திற்கு வலுச்சேர்த்து ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும் மாநகர முதல்வரினால் தீர்மானம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு உறுப்பினர்கள் அனைவரினதும் ஒருமித்த கருத்துடன் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமரத்ன தேரர் அவர்களால் தாக்க முற்பட்ட செயற்பாட்டிற்கு எதிப்புத் தெரிவித்தும், அது தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அச்செயற்பாட்டிற்கான கண்டனம் தெரிவிக்கும் முகமாகவும் தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திருக்கோணேஸ்வரர் ஆலய பகுதியினை புனித நகரமாக்கும் ஆலய பரிபாலன சபையின் முடிவினை ஆதரிக்கும் முகமாகவும் இங்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.