ஜனாதிபதி செயலணிக் கூட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்தும் கலந்துரையாடல் 

0
390
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான ஜனாதிபதி செயலணியினால் நடத்தப்பட்ட கூட்டத்தின் முடிவுகளை நடைமுறைப்படுத்தும் முகமான கலந்துரையாடல்  மட்டக்களப்பு மாவட்ட  செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (25) காலை கிழக்கு மாகாண ஆளுனர் போகொல்லாகம தலைமையில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் காணி தொடர்பான பிணக்குகளுக்கு தீர்வுகாணுமுகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவம், பொலிஸ் மற்றும் கடற்படையினர் முகாமிட்டுள்ள பொது இடங்களான பாடசாலை, வைத்தியாசலை, மக்கள் பாவனைக்கான பொதுக் கட்டங்களில் முகாமிட்டுள்ள படைத்தரப்பினர் எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் வேறு இடங்களுக்கு முகாம்களை மாற்றப்பட வேண்டும என ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைவாக செயல்படும்படி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 66.9781 ஏக்கர் நிலப்பரப்பு இன்னும் விடுவிக்கப்பட உள்ளதாக  மாவட்ட செயலக புள்ளிவிபரம் மூலமாக சுட்டிக்காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேய்ச்சல்தரை சம்பந்தமாகவும் ஆராயப்பட்டபோது ஐந்து பிரதேச செயலகங்கள் மேய்ச்சல்தரைக்காக 25802 ஹெக்ரயர் நிலப்பரப்பினை கோரியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கூட்த்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  மா.உதயகுமார் மற்றும், பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான அலிசாகிர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பிரதம செயலாளர், இராணுவக் கட்டளைத் தளபதி, பொலிஸ் தலைமை அதிபதி, ஆளுனர் செயலாளர், மற்றும் திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கருத்துக்களை வழங்கினர்.