திருமலையில் 5000 உறுப்பினர்களுடன் தமிழரசுக்கட்சி புனரமைக்கப்பட்டு கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

0
562

பொன்ஆனந்தம்

திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் கிராமியக்கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக புதிதாக தெரிவான கட்சியின் திருகோணமலை மாவட்ட குழுவின் தலைவரும் எதிர் கட்சித்தலைவர் இரா சம்பந்தனின் செயலாளருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார்

மாவட்டக்குழுவின் புனரமைப்பு தொடர்பாக எழுந்த பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவர் விளக்கமளிக்கையில் மேற்கண்ட வாறு குறிப்பிட்டார்.

அவர்மேலும் குறிப்பிடுகையில்,கடந்த காலத்தில் மாவட்டத்தின் உறுப்பினர் தொகை சுமார் நாநூறாக இருந்தது.

தற்போது நடைபெற்று முடிந்த புதிய புனரமைப்பின் அடிப்படையில் அதன் எண்ணிக்ரைக  5000 மாக உயர்த்தப்பட்டுள்ளது.

இம்முறை வட்டாரரீதியாக குழுக்கள் தெரிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் 52வட்டாரக் குழுக்கள்மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளன.ஒவ்வொரு வட்டாரக்கூட்டத்திலும் அகக்குறைந்தது 51 உறுப்பினர்கள் பங்கு பற்றவேண்டும் அவ்வாறு பங்குபற்றும் பட்சத்தில் மட்டுமே தெரிவுகள் நடைபெற்றன.

இவ்வாறு பார்க்கையில் பல வட்டாரங்களில் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதனடிப்படையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் ஐயாயிரமாக அதிகரித்த நிலையில் தெரிவாகியுள்ளனர்.

அதிலிருந்து 6 கோட்டக்குழுக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. மூதூர், திருகோணமலை நகரம், பட்டணமும் சூழலும்,; தம்பலகாமம்,குச்சவெளி,வெருகல் என கோட்டத்திற்கு உறுப்பினர்கள் வட்டாரக்குழுவில் இருந்து தெரிவாகியுள்ளனர். இவ்வட்டாரக்குழுக்களில் இருந்து தலா மூவர் தலைவர்.செயலாளர்,பொருளாளர் என்ற அடிப்படையில் வீதம் 18பேர் கொண்ட மாவட்டக்குழு தெரிவாகியுள்ளது.

இதன்படி மாவட்டக்குழுத்தலைவராக சண்முகம் குகதாசனாகிய நானும் செயலாளராக முன்னாள் நகரசபைத்தலைவர் கந்தசாமி செல்வராசாவும் ஓய்வுநிலை அதிபர் இராமலிங்கம் இரத்தினசிங்கம் பொருளாளராகவும் தெரிவாகியுள்ளனர்.

இதனடிப்படையில் கட்சியின் மாவட்ட கட்டமைப்பு முற்றாக புனரமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளன. அதனுடன் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.