குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டவே விரும்பிய மட்டக்களப்பின்பெண் வலயக்கல்வி பணிப்பாளர்.ஞா.ஸ்ரீநேசன் பா.உ

0
549

08.10.2018 அன்று பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களது மட்டக்களப்பு அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஓன்று இடம்பெற்றது.இதன் போது சமகால அரசியல் நிலைமைகள் பல ஆராயப்பட்டன. கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக ,ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,

அண்மையில் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் பணிப்பாளராக ஜனாப். மன்சூர் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார். இவரது நியமனத்தின் பின்னர் எமது மாவட்ட பெண் வலயக்கல்வி பணிப்பாளர் ஒருவர் உண்மைக்கு புறம்பான செய்தியினை கூறிவருவதாக அறிகின்றேன்.

அதாவது தனக்கு கிடைக்க வேண்டிய மாகாண கல்விப் பணிப்பாளர்  நியமனத்தினை தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு தடுத்ததாக  கூறி வருகின்றாராம். மாகாண கல்விப் பணிப்பாளர்  நியமனம் வழங்கப்படும்போது ஆளுநர் அவர்கள், எமது கட்சியிடமோ என்னிடமோ எந்தவொரு கலந்துரையாடலையும் செய்யவில்லை. எனினும் மேற்படி வலயக்கல்விப் பணிப்பாளர் பொய்யான குற்றச் சாட்டுக்களை கூறி வருவது தொடர்பாக பலர்   என்னிடம் கேட்டிருந்தனர். அது தொடர்பாக விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளேன்.

எமது மக்களுக்கு, நேர்மையாக ,வினைத்திறனுடன் சேவையாற்றக் கூடிய சகலரையும் முன்கொண்டு செல்வதற்கு எமது கட்சி பாடுபடுகிறது. எமது கடந்தகால செயற்பாடுகளை பார்க்கும் போது இது சகலருக்கும் விளங்கும். ஆனால் பாரிய பொறுப்புக்களை ஏற்று வெளிமாவட்டங்களில் கடமையாற்ற எமது அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். தமது திறமை மீதே நம்பிக்கை இல்லாத இவர்கள் தமது குடும்பம், தமது ஊர்,தமது மாவட்டம் என ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே  ஒடுங்கிக் கிடக்கவே விருப்பம் கொண்டுள்ளனர்.

இவ்வாறு குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டவே விரும்பிய இவர், மாகாணக் கல்வி பணிப்பாளர் பதவியை வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்றே எனக்கு தகவல் கிடைத்தது. தமது இயலாமையினை மறைக்க அரசியல்வாதிகளை சாட்டுச்சொல்வது வேடிக்கையாகும் என்றார்.