மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் புதன்கிழமை பதவியேற்றார்.

0
1891
புதிய கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் நேற்று (3) புதன்கிழமை காலை பதவியேற்றார்.

 
திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாணக்கல்விப்பணிமனையில் தமது கடமைகளை நேற்றுக்காலை 9மணியளவில்   பொறுப்பேற்றார். அத்தருணம் மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர்களான எஸ்.மனோகரன் எ.விஜயானந்தமூர்த்தி உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் சமுகமளித்திருந்தனர்.
 
பதவியேற்ற மறுகணம் உத்தியோகத்தர்களுடன் கூட்டமொன்றை நடாத்தினார்.
 
நேற்று புதன்கிழமை அலுவலக நாளாகையால் பொதுமக்களுடனான சந்திப்பை மேற்கொண்டார்.
 
இதற்குமுன்னர் மாகாணக்கல்விப்பணிப்பாளராகவிருந்த எம்.ரி.எ.நிஸாம் கிழக்கு மாகாண கல்வியமைச்சில் சிரேஸ்ட மேலதிக செயலாராக ஆளுநரால் நியமிக்கப்பட்டதையடுத்து ஜனாப் மன்சூர் மாகாணக்கல்விப்பணிப்பாளராக திங்களன்று நியமிக்கப்பட்டார்.
 
1961.08.21ஆம் திகதி கிளிநொச்சியில் பிறந்த ஜனாப் மன்சூர் கிளிநொச்சி இந்துமகாவித்தியாலயம் மருதமுனை அல்மனார் மகா வித்தியாலயம் கல்முனை கார்மேல் பற்றிமா தேசியகல்லூரி ஆகிய பாடசாலைகளில் பயின்று கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டதாரியாக வெளியேறினார்.
1985.12.04ஆம் திகதி முதன்முதலாக கல்முனை சாஹிறாக் கல்லூரியில் பட்டதாரி ஆசிரியராக கடமையேற்றார். பின்பு 1993இல் இலங்கை கல்வி நிரவாகசேவைப்பரீட்சையின் திறந்த போட்டிப்பரீட்சையில் சித்திபெற்று அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை கல்வியியல்கல்லூரிகளில் விரிவுரையாளராக 2007 வரை கடமையாற்றினார்.
பின்பு மூதூர் மற்றும் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளராக்கடமையாற்றி கிழக்கு கல்விஅமைச்சில் உதவி மற்றும் மேலதிக செயலாளராக கடமையாற்றினார்.
இந்தவேளையில் கிழக்கு ஆளுநரால் மாகாணக்கல்விப்பணிப்பாளராக கடந்த திங்களன்று நியமிக்கப்பட்டு நேற்று புதன் கிழமை கடமையேற்றார்.
 
இவர் கனடா யோக் பல்கலைக்கழகத்தில் கல்விமுதுமாணிப்பட்டப் படிப்பை புலமைப்பரிசில் பெற்று பூர்த்திசெய்தார்.
கல்வித்துறையில் 3 முக்கிய கனதியான நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
க.பொத. உயர்தர உயிரியல்துறை மாணவர்களுக்கு சிறந்த ஆசானுமாக திகழ்கிறார்