கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கு ஆப்பா? தமிழ் அரசியல்வாதிகள் மௌனம் : தமிழ்மக்கள் விசனம்!

0
258
கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கு ஆப்பா?
தமிழ் அரசியல்வாதிகள் மௌனம் : தமிழ்மக்கள் விசனம்!
(காரைதீவு   சகா)
இதுவரை காலமும் கல்முனை (தமிழ்) பிரதேச செயலாளர் என குறிப்பிடப்பட்டுவந்த
பதவிநிலைப்பெயர் தற்போது உதவி பிரதேச செயலாளர் என மாற்றம்
செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின் எழுத்துமூல
உத்தரவின் பேரில் இப்பெயர்மாற்றம் இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகின்றது.
இது தொடர்பில் கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகப்பிரிவிற்கு
புதிதாகநியமிக்கப்பட்ட இலங்கை நிருவாகசேவை அதிகாரி எஸ்.ஜெகருபனிடம்
கேட்டபோது இதனை மறுக்காமல் ஊர்ஜிதம் செய்தார்.
கடந்த ஒன்பதுவருடகாலமாக இச்செயலகத்திற்குப் பொறுப்பாகவிருந்த இலங்கை
நிருவாகசேவை அதிகாரி கே.லவநாதன்  தனது பதவிநிலைப்பெயராக பிரதேசசெயலாளர்
என்றே பாவித்துவந்துள்ளார். அதற்கு முன்பிருந்தவர்களும் அப்படியே
பாவித்துள்ளார்கள்.
இந்தநிலையில் தற்போது இந்த திடீர் மாற்றம் இடம்பெற்றுள்ளது.
தகவலறியும் சட்டத்தின்மூலம் இந்த மாற்றம் இடம்பெற்றதாக சொல்லப்படுகின்றது.
இந்த மாற்றம் இடம்பெற்று இருவாரகாலத்திற்கு மேலாகின்றபோதிலும் அங்குள்ள
தமிழ் அரசியல்வாதிகள் மௌனம் சாதித்துவருவது குறித்து கல்முனைவாழ்
தமிழ்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரத்தை பிரதான
பேசுபொருளாகக்கொண்டு தேர்தலில் வாக்குவேட்டையாடியவர்கள் அதற்கு ஆபத்து
என்று வரும்போது மௌனம் சாதிப்பதென்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது
என்று அவர்கள் ஆத்திரப்படுகின்றனர்.
கல்முனை தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரத்திற்கு விழுந்த முதல்
அடியாக இச்செயற்பாட்டைக் கருதமுடியும் என அரசியல்நோக்கர்கள் விமர்சனம்
செய்கின்றனர்.
முதலிலே பதவிநிலைப் பெயரில் ஆரம்பித்து பின்னர் படிப்படியாக செயலகத்தின்
ஒவ்வொரு நிருவாகச்செயற்பாடுகளிலும் தாவக்கூடிய துரதிஸ்டநிலை
தோன்றியுள்ளது. இதுவரை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகம் என்றிருந்த
பெயர்ப்பலகை மற்றும் கடிதத்தலைப்பு இனி  உப பிரதேச செயலகம் என
மாற்றம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
30வருட யுத்தம் போன்று கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக தரமுயர்த்தல்
விவகாரமும் மாறிவிடுமோ என கல்முனைவாழ் தமிழ்மக்கள் அஞ்சுகின்றனர்.
தமிழ்மக்களின் ஆபத்பாண்டவர்கள்போல் தங்களைச்சித்திரிக்கும்;
தமிழ்க்கட்சிகளின் தலைமைகள்  இவ்விடயத்தில் என்ன சொல்லப்போகிறார்கள்
என்பதை அங்குள்ள தமிழ்மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனரென விரக்தியுற்ற
தமிழ்ப்பிரமுகரொருவர் தெரிவித்தார்.
எடுத்ததற்கெல்லாம் அறிக்கைவிடும் முன்னாள் இந்நாள் தமிழ்அரசியல்வாதிகள்
இந்தவிடயத்தில் கண்டும்காணாமல் ஒருவிதமெத்தனப்போக்கை கடைப்பிடிப்பதும்
மௌனம் காப்பதும் இறுதியில் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என அவர் மேலும்
பொருமினார்.