சட்டவிரோத மாடு கடத்தலை நிறுத்தக்கோரி பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பு ஆர்பாட்டம்.

0
292

மட்டக்களப்பு, படுவான்கரைப்பிரதேசத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மாடு கடத்தலை நிறுத்தக்கோரி மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பு இன்று(30) காலை ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

படுவான்கரைப்பிரதேசத்தில் உள்ள பண்ணையாளர்கள் இவ் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்ததுடன், “சட்டவிரோத மாடு கடத்தலை தடைசெய்,” “படுவான்கரை மக்களின் வளங்கள் சுரண்டப்படுவதை நிறுத்து” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் கையிலேந்தியிருந்தனர்.

படுவான்கரைப் பிரதேசத்தில் மண்முனை பாலம் அமைக்கப்பட்டதன் பிற்பாடு, இரவுநேரங்களிலும், பகல்நேரங்களிலும் சட்டவிரோதமான முறையில், மாடுகள் கடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் தமது பகுதியில் உள்ள பல மாடுகள் களவாடப்பட்டுள்ளதாகவும், இதனை முற்றாக நிறுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில், கொக்கட்டிச்சோலை பொலிஸாரை வினவிய போது, சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்படும் மாடுகள் பல கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 2018ம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து இன்றுவரை 75க்கு மேற்பட்ட சட்டவிரோத மாடு கடத்தலுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டதோடு, மக்களின் ஆதரவு தமக்கு கிடைத்திருப்பதாகவும், இன்னமும் மக்களின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் சட்டவிரோத மாடு கடத்தல்களை நிறுத்த முடியுமென்றார்.