படுவான்கரைப்பிரதேசத்தில் வீதிகள் திருத்தப்படவில்லையென மக்கள் விசனம்.

0
381

மட்டக்களப்பு மாவட்டத்தின் தொண்ணுறு சதவீதமான வளங்கள் படுவான்கரை பகுதியில் உள்ளதுடன் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்ற நிலையில், தங்களது விளைபொருட்களை கொண்டு செல்வதற்கான பாதைகள் குன்றும் குழியுமாக காணப்படுவதாக ஆயித்தியமலை கண்டத்தின் வட்டவிதானை சுப்பிரமணிம் தெரிவித்தார். விளைநிலங்கள் அனைத்தும் படுவான்கரை பகுதியில் காணப்படுகின்றது. ஆனால் அப்பகுதிக்குச் செல்வதற்கான பாதைகள், பாலங்கள் புனரமைக்கப்படாது சேதமடைந்து காணப்படுவதினால் விவசாயிகள் தமது விளைபொருட்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக சுப்பிரமணிம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகத்தில் எட்டு பிரதேச செயலகப் பகுதியில் கூடுதலான விளைநிலங்கள் உட்பட அனைத்து வளங்களையும் படுவான்கரை கொண்டமைந்துள்ளது.

பெரும்போகம் மற்றும் சிறுபோக காலங்களில் குறிப்பாக மழையை நம்பியதாக செய்கை பண்ணப்படும் பெரும்போக காலங்களில் வெள்ளநீர் தேங்கிக் காணப்படுவதனால் விவசாயிகள் கால்நடையாகச் செல்வதற்குக் கூட பெரும் சிரமப்படுகின்றனர்.

இப்பகுதியில் வேளாண்மை செய்யும் அனைத்து விவசாயிகளும் நீர் வரி, ஏக்கர் வரி என கட்டணங்கள் செலுத்துகின்றார்கள். ஆனால், விவசாயிகளின் இன்னல்களை போக்குவதற்கு ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமும் கவனத்தில் கொள்வதில்லை.

அத்துடன், அண்மையில் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையில் விவசாயத்திற்கு என தனியான ஒரு அமைச்சரும் இருந்தார். அவர் கூட இந்தப் பிரதேச்தைக் கவனிக்கவில்லை.

ஏறாவூர்ப்பற்ற செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆயித்தியலை கிராமத்தினுடாக மணிபுரத்திற்கு செல்லும் பாதைகளில் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள மதகு சுமார் நூறு வருடங்கள் பழமைவாய்ந்ததாகவும்.

இது எப்போது அமைக்கப்பட்டதோ அன்றிலிருந்து இன்று வரைக்கும் ஒரு திருத்தங்களும் செய்யப்படவில்லை. இப்பாலத்தினுடாக மழை காலங்களில் விவசாயிகள் பயணங்களை மேற்கொள்வதில் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.

ஆனால், தற்போதைய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சொந்த ஊரான பொலநறுவை மாவட்டத்தில் ஆயிரம் குளங்கள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ், சிங்களப் பகுதி விவசாய நிலங்கள் அபிவிருத்திச் செய்யப்படுகிறன.

தமிழ் விவசாய பகுதியில் நூற்றுக் கணக்கான விவசாயிகள் பயன்படுத்தும் பாலத்தைக் கூட புனரமைப்புச் செய்யப்படவில்லை என விசனமடைந்தார்.

ஆகவே, படுவான்கரை பகுதியில் சேதமடைந்துள்ள பாலங்கள், மதகுகள், குளங்களை புனரமைப்புச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.